1000 ஆண்டுகள் பழமையான தங்கபுதையல் - தோண்டி எடுத்த இஸ்ரேல் இளைஞர்கள்
ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமையான மண்பானையில் பதுக்கிவைத்திருந்த தங்க நாணயங்களை இஸ்ரேல் இளைஞர்கள் தோண்டி எடுத்துள்ளனர்.
ஆகஸ்ட் 18ஆம் தேதி இந்த புதையல் கண்டுபிடிக்கப்பட்டதாக இஸ்ரேல் தொல்பொருள் ஆணையம் தெரிவித்துள்ளது. 1,100 ஆண்டுகளுக்கு முன்பு திரும்ப எடுத்துக்கொள்ளலாம் என்ற நோக்கத்தில் அதைப் புதைத்து வைத்திருக்கிறார்கள். அதனால்தான் பானை நகராமல் இருக்க பத்திரமாக ஆணியடித்து வைத்திருக்கிறார்கள் என்று அகழ்வாராய்ச்சி இயக்குநர் லியாட் கூறியுள்ளார்.
புதையல் மறைத்துவைக்கப்பட்ட இடம் மற்றும் அந்த உரிமையாளர் பற்றி தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்று இதைக் கண்டுபிடித்த இளைஞர்களில் ஒருவர் கூறியுள்ளார். மேலும் தரையைத் தோண்டியபோது, மிக மெல்லிய இலைகள் போன்று தென்பட்டதாகவும், அதை மீண்டும் தோண்டிப் பார்த்தபோதுதான், தங்க நாணயங்கள் என்று கண்டறியப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த அப்பாஸித் கலிபாட் காலத்திற்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த 24 காரட் தூய தங்க நாணயங்கள் இவை. அந்த காலத்தில் தங்க விலை மிக சொற்பமாக இருந்திருக்கும் என்று நாணய நிபுணர் ராபர்ட் கூல் தெரிவித்துள்ளார். மேலும் அந்த பானையில் 425 பொற்காசுகள் இருந்தன. இந்த நாணயத்தின் தொகையை வைத்து அந்த காலத்தில் எகிப்தின் செல்வந்த தலைநகர் ஃபுஸ்டாட்டில் ஒரு ஆரடம்பர வீட்டை வாங்கியிருக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.