உலகிற்கு ராஜ நாகங்கள் தரும் அதிர்ச்சி செய்தி.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!
நேபாளம் மற்றும் எவரெஸ்ட் மலைத்தொடரின் 9,000 அடி உயரத்தில் பத்துக்கும் மேற்பட்ட கிங் கோப்ராக்கள் எனப்படும் ராஜ நாகங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அரிய நச்சுப்பாம்பு இனமான ராஜ நாகங்கள், சாதாரணமாக குறைந்த உயரமுடைய வெப்ப மண்டல காடுகளில் மட்டுமே வாழுபவையாகும். இப்போது உயரமான மலைப்பகுதிகளில் தென்பட்டிருப்பது ஆச்சரியமாக இருப்பதாகவும் இது காலநிலை மாற்றத்தின் விளைவாக இருக்கலாம் எனவும் விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். இமய மலையின் மஹாலங்கூர் மலைத்தொடரில் அமைந்துள்ள எவரெஸ்ட் மலையில், GOPALESHWOR, BHANJYANG, SOKHOL, FULCHOWK ஆகிய பகுதிகளில் இந்த ராஜ நாகங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இது புதிய, கவனிக்கத்தக்க வன உயிரியல் நிகழ்வு என்று, நேபாள வானியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகிற்கு ராஜ நாகங்கள் தரும் அதிர்ச்சி செய்தி..
நேபாளத்தின் பிரபலமான மலைச்சிகரமான GAURI SHANKAR மலைப் பகுதியில் இருந்து ராஜ நாகங்களின் முட்டைகள் கண்டறியப்பட்டுள்ளன. உத்தராகண்ட் மாநிலத்திலும் 2ஆயிரம் மீட்டருக்கும் மேலான உயர் மலைப்பகுதிகளில் இதுபோன்ற நச்சுத்தன்மை கொண்ட பாம்புகள் காணப்பட்டுள்ளதாக உயிரியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். வெப்பநிலை மாற்றத்தால் ராஜ நாகங்களின் வாழும் பரப்பளவு மாறி வருகிறது என்று, இந்திய வனவிலங்கு ஆய்வியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மரபணு ஆய்வுகள் மூலம் ராஜ நாகங்கள் நான்கு தனித்தனி வகைகளைக் கொண்டிருப்பதும், அவை மாறியிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. பருவநிலை மாற்ற சுழற்சியின் ஒரு அங்கமா? அல்லது தனித்தனி சம்பவங்களா என்பதைத் தீர்மானிக்க ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இமயமலைத் தொடருக்கு உட்பட்ட இந்தியா, நேபாளம் உள்ளிட்ட எட்டு நாடுகளிலும் வெப்பநிலை ஆண்டுக்கு 0.05 டிகிரி செல்சியஸ் வீதம் அதிகரித்து வருவதும் கண்டறியப்பட்டுள்ளது. இது ராஜ நாகங்கள் உள்ளிட்ட உயிரினங்கள் மற்றும் விலங்குகளின் பரவலையும் வாழ்விட அமைப்பையும் மாற்றும் அபாயத்தை ஏற்படுத்தி, புதிய புவியியல் சூழல்களை உருவாக்கி வருவதாக வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.