வங்கதேசத்தில் பொதுத்தேர்தலையொட்டி முன்னெச்சரிக்கையாக 10 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் அண்டை தேசமான வங்கதேசத்தில் வரும் 30ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி நாடு முழுவதும் ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நேர்மையான முறையில் தேர்தல் நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என அமெரிக்க அரசு வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினாவிடம் கூறியுள்ளது.
இந்தச் சூழலில் 10 ஆயிரம் பேர் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் என்றும், அரசுக்கு எதிராக செயல்பட்டு வந்தவர்கள் என்றும் எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே எதிர்கட்சியினருக்கு அச்சத்தை உண்டாக்கவே கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர்கள் சாடியுள்ளனர். குறிப்பாக முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் வங்கதேச தேசிய கட்சியைச் சேர்ந்த 7 ஆயிரம் பேர் கைதாகியுள்ளனர்.
வங்கதேசத்தை பொறுத்தவரை, ஆளும் கட்சியான அவாமி லீக் கட்சிக்கும், எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசிய கட்சிக்கும் இடையே அரசியல் மோதல்கள் அதிகரித்துள்ளன. அண்மையில் கூட பரப்புரையின்போது இருகட்சியினருக்கும் இடையே ஏற்பட்ட கலவர மோதலில், அவாமி லீக் கட்சியைச் சேர்ந்த 2 பேர் உயிரிழந்தனர். 12க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அதுதொடர்பாக 45 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். இதுபோன்ற மோதல் நீடித்த வந்த நிலையில் தற்போது இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.