ஒரே குண்டு.. 32 ஏக்கர் க்ளோஸ்! வடகொரியாவிடம் கொத்துக் குண்டு! உலக நாடுகளுக்கு ஆபத்தா?
செய்தியாளர் - ராஜ்குமார். ர
வடகொரியா ஏற்கனவே அணு ஆயுதங்களைக் கொண்ட நாடாக அறியப்படும் நிலையில், தற்போது தனது வழக்கமான ராணுவ ஆயுதங்களின் திறனையும் அதிகரித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கொத்துக் குண்டு (Cluster Bomb) தொடர்பான புதிய சோதனையை அந்நாடு நடத்தியுள்ளது. வடகொரியாவின் ஏவுகணை நிர்வாகம் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி இந்தச் சோதனையை மேற்கொண்டுள்ளது. ராணுவப் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் கொத்துக் குண்டின் செயல்திறன் மற்றும் தாக்குதல் திறனை மதிப்பிடுவதே இதன் நோக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சோதனையில், 'Standard Type-2' கொத்துக் குண்டு சுமார் 136 கி.மீ தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கி, அதிகபட்சமாக 12 முதல் 13 ஹெக்டேர் பரப்பளவைத் தாக்கும் திறன் கொண்டிருப்பதாக வடகொரிய அரசு ஊடகமான KCNA தெரிவித்துள்ளது. அதாவது, சுமார் 30 முதல் 32 ஏக்கர் பரப்பளவு!
பொதுவாக, கொத்துக் குண்டுகள் (Cluster Bombs) என்பவை ஒரே குண்டுக்குள் பல சிறிய வெடிகுண்டுகளைக் கொண்டிருக்கும் வகையைச் சேர்ந்தவை. இவை இலக்கை நெருங்கும்போது திறந்து, அதற்குள் இருக்கும் சிறிய வெடிகுண்டுகளைப் பல்வேறு இடங்களில் சிதறடிக்கும். இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள பல இலக்குகளை ஒரே தாக்குதலில் பாதிக்கச் செய்ய முடியும்.
இதற்கிடையில், கொத்துக் குண்டுகளை நான்கு வகைகளாக உருவாக்கி வருவதாக வடகொரியாவின் ஏவுகணை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் அவற்றை ராணுவப் படைப்பிரிவுகளின் பயன்பாட்டுக்குக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதத்திலும், ஹ்வாசோங்-11 ரா (Hwasong-11 Ra) ரக தந்திரோபாய பாலிஸ்டிக் ஏவுகணைகளில் கொத்துக் குண்டுகளைப் பொருத்தி வடகொரியா சோதனை நடத்தியிருந்தது. தற்போது மீண்டும் இத்தகைய ஆயுதத்தைச் சோதனை செய்திருப்பது, தனது குறுகிய தூர ஏவுகணைகளின் தாக்குதல் திறனை மேம்படுத்துவதில் வடகொரியா கவனம் செலுத்தி வருவதைக் காட்டுகிறது.
ஒருபுறம் அணு ஆயுதத் திறனை வலுப்படுத்தி வரும் வடகொரியா, மறுபுறம் ஏவுகணைகளில் பொருத்தக்கூடிய கொத்துக் குண்டுகளின் திறனையும் மேம்படுத்தி வருகிறது. இந்நிலையில், சுமார் 32 ஏக்கர் பரப்பளவைத் தாக்கும் திறன் கொண்டதாக வடகொரியா கூறும் இந்தப் புதிய ஆயுதச் சோதனை சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
