ஸ்பெயினுக்குள் நுழைவதற்காக ஆப்பிரிக்காவைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான அகதிகள் எல்லைச் சுவரை முற்றுகையிட்டனர்.
மொராக்கோ நாட்டுக்கும் ஸ்பெயினின் சியூட்டா என்ற பிராந்தியத்துக்கும் இடையே இந்த எல்லைச் சுவர் அமைந்துள்ளது. சுமார் ஆறு மீட்டர் உயரம் கொண்ட தடுப்பு வேலியைத் தாண்டி ஸ்பெயினுக்குள் நுழைய அகதிகள் முயன்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இரும்புக் கம்பிகளையும், கற்களையும் கொண்டு நுழைவு வாயில்களை உடைக்க அவர்கள் முயன்றதாகவும் அதிகாரிகள் கூறினர். இதில் பாதுகாப்புப்படையைச் சேர்ந்த காவலர்கள் சிலரும், அகதிகளில் இருவரும் காயமடைந்தனர். அதன் பிறகு, காயமடைந்திருந்த இரு அகதிகள் மட்டும் ஸ்பெயினுக்குள் அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் மொரோக்கோவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர். ஐரோப்பிய நாடான ஸ்பெயினின் சியூட்டா பகுதி ஆப்பிரிக்காவில் அமைந்திருக்கிறது.