"வேலையில் எந்த அவமானமும் இல்லை” - நேற்று ஆப்கன் அமைச்சர்.. இன்று டெலிவரி பாய் வேலை

"வேலையில் எந்த அவமானமும் இல்லை” - நேற்று ஆப்கன் அமைச்சர்.. இன்று டெலிவரி பாய் வேலை
"வேலையில் எந்த அவமானமும் இல்லை” - நேற்று ஆப்கன் அமைச்சர்.. இன்று டெலிவரி பாய் வேலை

ஆப்கானிஸ்தானின் முன்னாள் அமைச்சரான சையது சதாத் இப்போது ஜெர்மனியில் சைக்கிளில் உணவு டெலிவரி செய்து வாழ்க்கையை நடத்தி வருகிறார், அவர் தனது அனுபவங்களை பகிர்கிறார்.

ஜெர்மனியில் சையது சதாத் வார நாட்களில் ஆறு மணிநேரமும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நண்பகல் முதல் இரவு 10 மணி வரை, சதாத் தனது ஆரஞ்சு கோட் மற்றும் பெரிய சதுர பேக்  அணிந்து பீட்சா டெலிவரி செய்து வருகிறார். இது தொடர்பாக பேசும் சதாத், "வேலையில் எந்த அவமானமும் இல்லை. வேலை வேலைதான். ஒரு வேலை இருந்தால், பொதுமக்களிடம் அதற்கான தேவை உள்ளது என்று அர்த்தம், யாராவது அதை செய்ய வேண்டும்தானே" என்று அவர் கூறினார்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முதுகலைப்பட்டம் படித்த சதாத், லண்டன் உள்ளிட்ட நாடுகளில் உயர்பதவிகளில் பணியாற்றியவர். அதன்பின்னர் அவர் 2016 முதல் 2018 வரை ஆப்கானிஸ்தானில் தகவல் தொடர்பு அமைச்சராக இருந்தார். 50 வயதான அவர் அரசாங்கத்தின் ஊழல் பிடிக்காமல் தனது பதவியை ராஜினாமா செய்தார். "அமைச்சராக வேலை செய்யும் போது ஜனாதிபதியின் நெருங்கிய வட்டத்திற்கும் எனக்கும் பெரிய வித்தியாசம் இருந்தது. அவர்களின் கோரிக்கைகள் தனியார் நலனுக்காக இருந்தன, அரசாங்க திட்டங்களுக்கான பணம் சரியாக செயல்படுத்தப்பட வேண்டும் என்று நான் விரும்பினேன். அதனால் அவர்கள் என்னைத் வெளியேற்ற முயன்றனர், நான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தேன்" என தெரிவித்தார்.

2020 இல் ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்தால் சதாத் ஜெர்மனியில் குடியேறினார். இரட்டை ஆப்கானிஸ்தான்-பிரிட்டிஷ் குடிமகனாக பிரிட்டனில் ஒரு பணியில் சேர்ந்திருக்கலாம், ஆனால் ஜெர்மனியில் தனது துறைக்கு அதிக வாய்ப்புகள் இருந்ததாக சதாத் கூறினார். அதன்பின் வேலைவாய்ப்பு கிடைக்காததால் உணவு விநியோக நிறுவனமான லைஃபெராண்டோவில் பணியாற்றும் அவர், இப்போது ஒரு நாளுக்கு நான்கு மணிநேரம் மொழி வகுப்புகள் எடுத்து வருகிறார். "இந்த சவால் ஒரு குறுகிய காலத்திற்கு மட்டுமே என்று எனக்குத் தெரியும், எனக்கு வேறு வேலை கிடைக்கும் வரை இந்த வேலையை தொடர்வேன்" என்று அவர் கூறினார். ஒவ்வொரு மாதமும் 1,200 கிலோமீட்டர் சைக்கிள் ஓட்டுவதன் மூலமாக உடல் நலனும் மேம்படுவதாக அவர் தெரிவித்தார்.

தலிபான்கள்  கடந்தகால தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்றும், சர்வதேச சமூகம் ஆப்கானிஸ்தானுக்கு எதிராகத் திருப்ப வேண்டாம் என்றும், தொடர்ந்து ஆப்கனுக்கு உலக நாடுகள் பொருளாதார ஆதரவை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com