“அதிபர் தேர்தலில் நான் போட்டியிட போகிறேன்” - கோத்தபய ராஜபக்‌ஷே அறிவிப்பு

“அதிபர் தேர்தலில் நான் போட்டியிட போகிறேன்” - கோத்தபய ராஜபக்‌ஷே அறிவிப்பு
“அதிபர் தேர்தலில் நான் போட்டியிட போகிறேன்” - கோத்தபய ராஜபக்‌ஷே அறிவிப்பு

ராஜபக்‌ஷே ஆட்சியிலிருந்தால் இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்திருக்காது என்று இலங்கையின் முன்னாள் பாதுகாப்புத்துறை செயலாளர் கோத்தபய ராஜபக்‌ஷே தெரிவித்துள்ளார். 

இலங்கையில் கடந்த மாதம் 21ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டத்தன்று மூன்று தேவாலயங்கள் உள்ளிட்ட ஏழு இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் 250க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். அத்துடன் பலர் காயமடைந்தனர். இதனால் இலங்கையில் பதட்டமாக சூழலில் நிலவிவந்தது. தற்போது அங்கு பதட்டம் தனிந்து இயல்பு நிலை மெல்ல திரும்பி வருகிறது.

இந்நிலையில் இலங்கையின் முன்னாள் பாதுகாப்புத்துறை செயலாளரும் முன்னாள் அதிபர் ராஜபக்‌ஷேவின் தம்பியுமான கோத்தபய ராஜபக்‌ஷே  ‘தி வீக்’ தளத்திற்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர், “ஈஸ்டர் தினத்தன்று நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. 

2009ஆம் ஆண்டிற்குப் பிறகு இலங்கை இத்தகைய தாக்குதலை சந்திக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. ராஜபக்‌ஷே ஆட்சியில் நாட்டின் பாதுகாப்பிற்கு அதிக கவனம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆகவே அவர் இப்போது ஆட்சியில் இருந்திருந்தால் இது போன்ற சம்பவங்கள் நடந்திருக்காது. ஏனென்றால் நாங்கள் பாதுகாப்பு விஷயங்களில் அதிக கவனம் செலுத்தியதால் தான் எல்.டி.டி.இ படைகளை முற்றாக அகற்ற முடிந்தது. 

மேலும் புலனாய்வு துறையிடமிருந்து தகவல் கிடைத்து இலங்கை அரசு அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. குறிப்பாக இந்தியாவிலிருந்து ஏப்ரல் மாதம் 10ஆம் தேதியே புலனாய்வு தகவல் கிடைத்தது. ஆனால் அந்தத் தகவல் மீது இலங்கை அரசு எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என்பது வருத்தமளிக்கிறது. 

இந்திய புலனாய்வு அமைப்புகள் இலங்கைக்கு எப்போதும் உதவி வருகின்றனர். அதேபோல இலங்கையும் இந்தியாவிற்கு புலனாய்வு தகவல்களை பறிமாறிவருகிறது. நான் பாதுகாப்புத் துறை செயலாளராக இருந்தப் போது இந்திய அரசு கொடுத்த தகவலின் பேரில் பயங்கரவாதிகள் சிலரை கைது செய்ய உத்தரவிட்டேன். அத்துடன் நான் பாதுகாப்புத் துறை செயலாளர் பதவியிலிருந்தப் போது இந்தியாவுடன் நல்ல ஒத்துழைப்புடன் செயல்பட்டேன். இந்தியாவுடன் நெருக்கமான உறவுடன் பணியாற்றுவது இலங்கைக்கு எப்போதும் நல்லது. 

ஆனால் ராஜபக்‌ஷேவின் ஆட்சியில் இறுதி பகுதியில் இந்தியாவிற்கு எதிராக மாறி சீனாவுடன் இணக்கமாக செயல்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அது முற்றிலும் தவறானது. இலங்கையில் உள்நாட்டு போருக்கு பிறகு அதிகளவில் கட்டுமான பணிகள் தேவைப்பட்டன. அதற்கு சீனா அரசு முதலீடுகளை வழங்கியது. அதனால்தான் சீனாவுடன் இலங்கை இணைந்து செயல்பட்டது. 

இலங்கை அரசு ஒருபோதும் இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்காது. இந்தியாவிற்கு பாதகம் விளைவிக்க எண்ணி ஏதாவது நாடு இலங்கையில் தங்கள் ராணுவத்தை நிறுத்த முற்பட்டால் அதனை நாங்கள் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம். தற்போது இலங்கையில் அமைதி குலைந்துள்ளது. இலங்கை அரசின் செயல்பாடே இந்தச் சூழலிற்கு காரணம். அடுத்து நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில் நான் போட்டியிடவுள்ளேன்” எனத் தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com