நீங்கள் யார் பக்கம்?: நவாஸ் ஷெரீஃபுக்கு நெருக்கடி கொடுக்கும் சவுதி மன்னர்
உங்கள் ஆதரவு கத்தாருக்கா அல்லது எங்களுக்கா என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபிடம் சவுதி மன்னர் சல்மான் கேட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கத்தார் பிரச்னைக்கு அரசியல்ரீதியான தீர்வு காணும் பொருட்டு சவுதிக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் சென்றுள்ளார். சவுதி மன்னர் சல்மானை ஜெட்டாவில் அவர் சந்தித்துப் பேசினார். ஷெரீஃபின் நிலைப்பாட்டைத் தீர்க்கமாகத் தெரிவிக்க வேண்டும் என்று கூறிய சல்மான், உங்கள் ஆதரவு கத்தாருக்கா அல்லது சவுதி தலைமையிலான நாடுகளுக்கா என்பதை முதலில் முடிவு செய்யுமாறு கூறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தீவிரவாதத்துக்கு உதவி செய்வதாகக் கூறி கத்தாருடனான அரசியல்ரீதியான உறவை சவுதி, எகிப்து உள்ளிட்ட நாடுகள் முறித்துக் கொண்டன. சவுதி உள்ளிட்ட நாடுகளின் இந்த முடிவுக்குப் பின்னர் இருதரப்பினரிடையே சமாதானம் ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சித்து வருகிறது. இதற்காக ராணுவ தலைமை தளபதி ஜெனரல் ஒமர் ஜாவேத் பாஜ்வாவுடன் குவைத், கத்தார் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்குச் செல்லவும் நவாஸ் ஷெரீஃப் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.