கூகுள், ஃபேஸ்புக் பற்றி எச்சரிக்கை விடுக்கும் சர்வதேச பொது மன்னிப்பு அமைப்பு..!
கூகுள் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனங்களின் தகவல் திரட்டும் வர்த்தக நடைமுறை காரணமாக மனித உரிமைக்கு உலகம் முழுவதும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக சர்வதேச பொது மன்னிப்பு அமைப்பு எச்சரித்துள்ளது.
Suveilance Giants என்ற பெயரில் மனித உரிமை அமைப்பான சர்வதேச பொது மன்னிப்பு அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. இணைய தளங்களை இலவசமாக தொடர்பு கொள்ள அனுமதித்து, பயனாளர்களின் தகவல்களை தனக்குச் சாதகமாக விளம்பர வர்த்தகத்துக்கு இந்நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்வதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கூகுள், ஃபேஸ்புக்கின் இத்தகைய தகவல் திரட்டும் வர்த்தக முறையால், அவர்கள் அளிப்பது இலவச சேவையல்ல என்றும் அதற்கான கட்டணத்தை விளம்பரம் மற்றும் தகவல் பரிமாற்றத்தின் மூலம் பெற்று விடுவதாகவும் பொது மன்னிப்பு அமைப்பு கூறியுள்ளது. இதுபோன்ற வர்த்தக நடைமுறையால் உலகம் முழுவதும் பயனாளர்களின் தனித்தகவல்கள் பகிரங்கப்படுத்தப்பட்டு, தனி மனித உரிமையே அச்சுறுத்தலுக்கு ஆளாவதாகவும் அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
உலகின் இருபெரும் இணைய தள நிறுவனங்களும் பயனாளர்களைக் கண்காணிக்கும் நிலையில், அவர்களைப் பற்றிய தனித்தகவல்களைத் திரட்டி, அவர்களுக்கு எதிராகவே பயன்படுத்தக்கூடும் என்றும் லண்டனைச் சேர்ந்த பொது மன்னிப்பு அமைப்பு எச்சரித்துள்ளது. இதற்கிடையே, பயனாளர்களை திசை திருப்பி, தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அரசியல் விளம்பரங்களைக் கையாள்வதில் எச்சரிக்கையுடன் இருப்பதாகவும், விதிகளை கடுமையாக்கியுள்ளதாகவும் கூகுள் தெரிவித்துள்ளது.