பூதாகரமாய் அச்சுறுத்தும் "பூஞ்சை தொற்றுகள்"... எதிர்கொள்ள மனிதகுலம் தயாரா?

பூதாகரமாய் அச்சுறுத்தும் "பூஞ்சை தொற்றுகள்"... எதிர்கொள்ள மனிதகுலம் தயாரா?
பூதாகரமாய் அச்சுறுத்தும் "பூஞ்சை தொற்றுகள்"... எதிர்கொள்ள மனிதகுலம் தயாரா?

வைரஸ் தொற்றால் உலகம் பல்வேறு இன்னல்களை சந்தித்துள்ள நிலையில், சத்தமில்லாமல் நிகழ்ந்து கொண்டிருக்கும் பூஞ்சை தொற்றுகளையும் எதிர்கொள்ள உலகம் விழித்துகொள்ள வேண்டிய இடத்தில் இருக்கிறது.

கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் சீனாவின் வூஹான் மாநகரில் கொரோனா தொற்று கண்டறியப்படும் வரையிலும் கோடிக்கணக்கானோரின் வாழ்க்கை வழக்கம்போலவே இயங்கிக் கொண்டிருந்தது. ஆனால், அதற்குப் பிந்தைய நிலைமையே வேறு. மிகவும் வேகமாக மனிதர்களிடையே பரவத் தொடங்கிய வைரஸ் பல்லாயிரக்கணக்கானோரின் உயிரை காவு வாங்கத் தொடங்கிய பின்பே, உலக நாடுகள் விழித்துக் கொள்ளத் தொடங்கின. ஒன்றன்பின் ஒன்றாக அனைத்து நாடுகளும் பொதுமுடக்கத்தை அமல்படுத்திடவே, பலரது வாழ்க்கை தலைகீழாக மாறியது. பிப்ரவரி 10, 2023-ம் ஆண்டின் நிலவரப்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்ட 50,17,139 பேர் உயிரிழந்துள்ளனர் என உலக சுகாதார அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கொரோனா பொதுமுடக்க காலமானது "பொருளாதார வளர்ச்சியின் முதுகெலும்பில் விழுந்த சம்மட்டி அடி" என்றே வல்லுநர்கள் பலரும் கூறி வருகின்றனர். இந்த வைரஸ் மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்டதா, இயற்கையாகவே உருவானதா எனும் விவாதங்கள் இன்றளவும் நீண்டு கொண்டே இருக்கின்றன. ஒரே ஒரு வைரஸ் காலநிலைகளுக்கு ஏற்ப தன்னை தகவமைத்து உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் இதே வேளையில்தான், "மியூகோர்மைசிஸ் அல்லது கருப்பு பூஞ்சை" எனும் மற்றொரு நோய் குறித்து மக்களை ஆட்டிப்படைத்து வருகிறது. இதையொட்டி "பூஞ்சை நோய்கள்" குறித்து மக்கள் பரவலாக பேசத் தொடங்கி வருகின்றனர். இத்தகைய பூஞ்சை நோய்களின் வகைகள், ஆபத்து உள்ளிட்ட பல காரணிகளையே இந்த கட்டுரையில் நாம் காணவிருக்கிறோம்.

மோஸ்ட் வான்டட் பட்டியல் - பூஞ்சை தொற்றுகளுக்கான தடுப்பூசிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை

ஒவ்வொரு ஆண்டும் பூஞ்சை தொற்றுகள் மூலம் சுமார் 2 மில்லியன் மக்கள் இறக்கின்றனர். இந்த எண்ணிக்கையானது TB அல்லது மலேரியாவால் உயிரிழப்பவர்களை விட அதிகமாகும். நம்மிடம் இருக்கக்கூடிய குறைந்த அளவிலான சிகிச்சை முறைகளுக்கு எதிராக, பூஞ்சைகளும் எதிர்ப்புத் திறனைப் பெற்று வருகின்றன. அதேநேரம் பூஞ்சைக்கு எதிரான மாற்று வழி சிகிச்சை முறைகளும் மிகக் குறைந்த அளவிலேயே காணப்படுகிறது. கோவிட் தாக்கியபோது உலகம் வைரஸ் தொற்றுநோய்க்கு ஒப்பீட்டளவில் தயாராக இல்லை. பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்த பிறகே விஞ்ஞானிகள் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை தொடர்ச்சியாக உருவாக்கி வருகின்றனர். ஆனால், பூஞ்சைகள் விஷயத்தில் கதையே வேறு. இன்றளவும் அவற்றிற்கு எதிராக தடுப்பூசிகள் எதுவுமே இல்லை.

அக்டோபரில், உலக சுகாதார அமைப்பானது (WHO) மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தான மைக்கோலாஜிக்கல் "மோஸ்ட் வான்டட்" பட்டியலை உருவாக்கும் முதல் உலகளாவிய முயற்சியில் இறங்கியது. அதன்படி வெளியிடப்பட்ட பட்டியலில் 19 பூஞ்சைகள் இடம்பெற்றிருந்தன. அந்த அறிக்கையானது பூஞ்சைகளால் மனித ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தல் வளர்ந்து வரும்போதிலும், உலகளவில் மிகக் குறைந்த ஆராய்ச்சி நிதியையே பெறுகிறது என தெரிவித்தது. இத்தகைய காரணிகளால் பூஞ்சை நோய்த்தொற்றின் கொள்கை மற்றும் நிரல் நடவடிக்கைகளை மேம்படுத்துவது கடினமாகிறது.

உலகளவில் 12 மில்லியன் பூஞ்சை இனங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளன. இருப்பினும் இவற்றில் பெரும்பாலானவை ஒருபோதும் வகைப்படுத்தப்படவில்லை. இந்த பூஞ்சை இனங்களில் ஒரு பகுதியே மனிதர்களை பாதிக்கிறது. இவை ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஒரு பில்லியன் நோய்த்தொற்றுகளுக்கு காரணமாகின்றன. இதுகுறித்து எக்ஸெட்டரில் உள்ள எம்.ஆர்.சி சென்டர் ஃபார் மெடிக்கல் மைக்காலஜியின் இணைப் பேராசிரியரான மார்க் ராம்ஸ்டேல் பேசுகையில், " இந்த விவகாரத்தை மேலோட்டமாக காண்போர் யாரும் கவலைப்படுவதில்லை. ஆனால், உயிருக்கு ஆபத்தான நோய்த் தொற்றுகளை ஏற்படுத்தும் ஒரு முக்கிய குழு இந்த பூஞ்சைகளில் உள்ளது. பூஞ்சை தாக்குதலுக்குள்ளாகும் மிகவும் வயதானவர்கள் அல்லது இளைஞர்களின் நோயெதிர்ப்பு அமைப்பானது சரியாக வேலை செய்யாது” என்கிறார்.

பூஞ்சை நோய்த் தொற்றுகளின் விளைவாக ஒரு வருடத்திற்கு சுமார் 1.5 மில்லியன் மக்கள் உயிரிழக்கின்றனர். இந்த எண்ணிக்கையானது குறைத்து மதிப்பிடப்பட்டதாக கூட இருக்கலாம். ஏனெனில் பூஞ்சைகள் பெரும்பாலும் பெரிய உடல்நலப் பிரச்சினைகளைக் கொண்டவர்களை பாதிக்கின்றன. மனித உயிரிழப்புக்கான முதன்மைக் காரணம் லுகேமியா அல்லது இதய மாற்று அறுவை சிகிச்சை என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், உண்மையில் அவர்களைக் கொல்வது "ஒரு பூஞ்சை தொற்றுதான்" என வலுவான கூறு உள்ளது.

பள்ளத்தாக்கு காய்ச்சல் -ஆரோக்கியமானவர்களையும் பாதிக்கக்கூடும்

WHO-ன் பட்டியலில் "ஈஸ்ட், அஸ்பெர்கிலஸ் ஃபுமிகேடஸ், மண் மற்றும் அழுகும் தாவரங்களில் காணப்படும் பூஞ்சைகள்" ஆகியவையே மனிதர்களைக் கொல்லும் பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன. இது எச்ஐவி, நாள்பட்ட நுரையீரல் நோய் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ‘ஆஸ்பெர்கில்லோசிஸ்’ எனப்படும் உயிருக்கு ஆபத்தான தொற்றுநோயை ஏற்படுத்தும். பாதிக்கப்படுவோரின் பட்டியலில் உறுப்பு மாற்று சிகிச்சை பெற்றவர்களும் அடங்குவர்.

WHO-ன் பட்டியலில் உள்ள சில பூஞ்சைகள் ஆரோக்கியமான மனிதர்களையும் பாதிக்கலாம். உதாரணத்துக்கு "கோக்கி" என அழைக்கப்படும் “கோசிடியோய்டுகள்” பூஞ்சைகளானது, அதனை சுவாசிக்கும் நபர்களுக்கு ‘பள்ளத்தாக்கு காய்ச்சல்’ எனும் நோயை ஏற்படுத்துகின்றன. இந்த வகை பூஞ்சைகள் தென்மேற்கு அமெரிக்கா, மெக்சிகோ உள்ளிட்ட இடங்களில் மண்ணில் காணப்படுகின்றன. இதனால் பாதிக்கப்பட்டவர்களில் 10 சதவீதம் பேர் நீண்ட கால நுரையீரல் பிரச்சனைகளுக்கு உள்ளாகின்றனர். பாதிக்கப்பட்டவர்களில் 1 சதவீதத்தினருக்கு மூளை உட்பட உடலின் மற்ற பகுதிகளுக்கும் தொற்று பரவி மரணத்தை விளைவிக்கிறது. இதனால் அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1,50,000 பேர் பாதிக்கப்படுகின்றனர். அதில் 75 பேர் உயிரிழக்கின்றனர். அத்துடன் 1998 முதல் 2015-ம் ஆண்டுக்கு இடையே பதிவான நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கையும் 400 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு ஒருவேளை காலநிலை மாற்றம் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

மியூகோர்மைகோசிஸ் - கண்களை பாதிக்கும் இது கோவிட் காரணமாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது

"அஸ்பெர்கில்லோசிஸ்" மற்றும் "மியூகோர்மைகோசிஸ்" அல்லது "பிளாக் ஃபங்கஸ் சிண்ட்ரோம்" உள்ளிட்ட பிற பூஞ்சை தொற்றுகள் கோவிட் காரணமாக அதிகரித்ததாக கூறப்படுகிறது. இது ஒரு அரிய ஆபத்து விளைவிக்கக் கூடிய தொற்றுநோயாகும். இது பாதிக்கப்பட்ட திசுக்களை உயிரிழக்கச் செய்து கருப்பு நிறமாக மாற்றும். ஒடுக்கப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி அல்லது நுரையீரல் பாதிப்பு உள்ளவர்களுக்கு, இந்த நோய்த்தொற்றுகள் மிகவும் பொதுவானவை ஆகும்.

மியூகோர்மைகோசிஸின் அறிகுறிகள் பயங்கரமானவை. தொற்றானது பெரும்பாலும் சைனஸில் தொடங்கும். பின்னர் கண்கள் மற்றும் மூளை உள்ளிட்ட உறுப்புகளுக்கு பரவக்கூடும். இதன் விளைவாக தோல் கருமை, முக வீக்கம், மங்கலான பார்வை, மாற்றப்பட்ட நனவு அல்லது கோமா போன்றவை ஏற்படக்கூடும். பாதிக்கப்பட்ட சில நோயாளிகள் இரு கண்களிலும் பார்வையை இழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட எலும்பு மற்றும் திசுக்களை அகற்ற அறுவை சிகிச்சை செய்ய நேர்ந்திருக்கிறது. இந்த கொடூரமான பூஞ்சை நோய்கள் ஒருவரிடமிருந்து, மற்றொரு நபருக்கு பரவுவதில்லை என்பது ஆறுதலளிக்கும் விஷயம். இவை பொதுவாக சுற்றுச்சூழலில் இருந்தே அதிகளவில் மனிதர்களை பாதிக்கிறது. உலகின் பிற பகுதிகளை விட இந்தியாவிலேயே மியூகோர்மைகோசிஸ் 70 முதல் 80 மடங்கு அதிகமாக உள்ளது.

கேண்டிடா ஆரிஸ் - நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை முழுமையாக பாதிக்கக்கூடியது

WHO-ன் முக்கியமான பட்டியலில் உள்ள மற்றொரு பூஞ்சையின் பெயர் "கேண்டிடா ஆரிஸ்". இது வாய்ப்புண்னை ஏற்படுத்தும் ஈஸ்டின் வகையைச் சேர்ந்தது. இது முக்கியமாக பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்புகளைக் கொண்டவர்களை வேட்டையாடுகிறது. இந்த பூஞ்சையானது இரத்தத்தில் நுழைந்தால், பாதிக்கப்பட்டவர்கள் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் பாதிக்குப் பாதியே ஆகும். கடந்த 2009-ம் ஆண்டு, டோக்கியோவில் 70 வயதான ஜப்பானியப் பெண்ணின் காதின் உள்ளே இந்த பூஞ்சை கண்டுபிடிக்கப்பட்டது. அதுவரையிலும் இப்படி ஓர் பூஞ்சை இருப்பதையே அறிவியல் உலகில் யாரும் அறிந்திருக்கவில்லை. கண்டுபிடிக்கப்பட்ட ஓரிரண்டு ஆண்டுகளுக்குள்ளேயே ஆசியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளில் தொற்றுகள் பதிவாகின.

லண்டன் இம்பீரியல் கல்லூரியில் உள்ள உலகளாவிய தொற்று நோய் பகுப்பாய்விற்கான எம்.ஆர்.சி மையத்தைச் சேர்ந்த பேராசிரியர் மேத்யூ ஃபிஷர் கூறுகையில், "இது இப்போது உலகம் முழுவதும் உள்ளது. கிருமிநாசினிகள் மற்றும் வெப்பத்தை ஓரளவு எதிர்ப்பதால், இதனை அழிப்பது மிகவும் கடினமாக உள்ளது. இதனை கண்டறிந்தால் மருத்துவமனையின் அனைத்து வார்டுகளையும் தற்காலிகமாக மூடுவதைத் தவிர வேறு வழியில்லை. கேண்டிடா ஆரிஸ் எங்கிருந்து வந்தது என்பது தெளிவாகத் தெரியாது. பூஞ்சை பல்லுயிர்களில் இந்த குறிப்பிட்ட இனம் அதிர்ஷ்டம் பெற்றது என்று நாங்கள் யூகிக்கிறோம்" என்கிறார்.

காலநிலை மாற்றத்தால் இந்த பூஞ்சையினங்கள் மனிதர்களைக் கொல்லக்கூடிய வகையில் மாற்றமடைந்திருக்க வாய்ப்புண்டு என கூறப்படுகிறது. விவசாயம், மருத்துவத்தில் அதிகப்படியான நோயெதிர்ப்பு மருந்துகளை பயன்படுத்துவதும், தீங்கு விளைவிக்கும் பூஞ்சைகள் உருமாற்றமடைந்து செழித்து வளர வழிவகை செய்கின்றன. இந்த விவகாரத்தில் சிக்கல் என்னவென்றால், நான்கு வகை பூஞ்சை எதிர்ப்பு மருந்துகள் மட்டுமே நம்மிடத்தில் பயன்பாட்டில் உள்ளன. அத்துடன் புதிய மருந்துகளை உருவாக்குவதிலும் பல்வேறு சவால்கள் நிறைந்திருக்கின்றன.

1.5 சதவீதத்துக்கும் குறைவான ஆராய்ச்சி நிதி

பூஞ்சைகளால் ஏற்படும் அச்சுறுத்தலை பரபரப்பாக்காமல் இருப்பது முக்கியம் என்றும் WHO வலியுறுத்துகிறது. இதுகுறித்து WHO-ன் நுண்ணுயிர் எதிர்ப்புப் பிரிவின் டாக்டர் ஹாதிம் சதி பேசுகையில், "நோயெதிர்ப்பு மருந்தை எதிர்க்கக் கூடிய பாக்டீரியாக்கள் மனிதர்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. புதிய தயாரிப்புகளின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடுகளில் மட்டும் கவனம் செலுத்தாமல் விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டிய நேரமிது. அத்துடன் நோயின் இயக்கவியல், தொற்றுநோயியல், சூழலியல் மற்றும் பூஞ்சை தொற்றுநோய்களின் உலகளாவிய விநியோகத்தைப் புரிந்துகொள்வதற்கான அடிப்படை அறிவிவியலையும் அறிந்திருக்க வேண்டியது அவசியமாகிறது" என்கிறார்.

பூஞ்சைகள் உண்மையில் விலங்குகளுடன் மிகவும் நெருக்கமாக தொடர்புடையவை என்பதால், பூஞ்சையின் வளர்ச்சி மற்றும் வளர்ச்சியில் குறுக்கிடக்கூடிய எந்த மருந்துகளும் நமக்கு நச்சுத்தன்மை வாய்ந்தவை. அனைத்து தொற்று நோய் ஆராய்ச்சி நிதியில் 1.5 சதவீதத்துக்கும் குறைவாகவே பூஞ்சை நோய்களுக்கு ஒதுக்கப்படுகிறது. WHO-ன் அறிக்கையானது, பூஞ்சை நோய் கண்காணிப்பு, சிறந்த நோயறிதல் கருவிகளை அதிகரிக்க வேண்டுமென வலியுறுத்துகிறது. பல மருத்துவக் கல்லூரிகளில் முழு பயிற்சியின் போதும், பூஞ்சை நோய்க்கிருமிகள் குறித்து ஒன்றிரண்டு விரிவுரைகளை மட்டுமே பெறுகிறார்கள். ஆகையால் பூஞ்சை நோய் குறித்த பாடத்திட்டங்களுடன் பயிற்சியையும் அதிகரிக்க வேண்டியது அவசியமாகிறது.

இதுகுறித்து ராம்ஸ்டேல் பேசுகையில் "சுமார் 6,000 வகையான பூஞ்சைகள், வணிகம் சார்ந்த தாவரங்களில் நோயை ஏற்படுத்துவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் உலகின் 40 சதவீதம் நெற்பயிர்களானது, "அரிசி வெடிப்பு நோய்" எனப்படும் பூஞ்சை நோயால் இழக்கப்படுகின்றன. இது ஒரு பெரிய உணவு பாதுகாப்பு பிரச்சினை" என தெரிவிக்கிறார்.

குறைத்து மதிப்பிடலாகாது : கண்காணிக்க உலகில் போதுமான மைக்கோலஜிஸ்டுகள் இல்லை

WHO-ன் அறிக்கையானது அறியப்படாத பூஞ்சைகளின் அச்சுறுத்தல்கள் குறித்து விவரிக்கவில்லை. அத்தகைய பூஞ்சைகளின் நோய்த்தாக்குதல் எதுவும் மனிதர்களுக்கு பரவவில்லை. 1990-களில் தொடங்கி "சைட்ரிட்" பூஞ்சைகளால் ஏற்படும் நோய்க்கு ஆளான பிறகு, நீரிலும், நிலத்திலும் வாழும் (இருவாழ்விடம்) உயிரினங்களின் வகைகள் 500-லிருந்து, 90- ஆக குறைந்து விட்டன. புகழ்பெற்ற "தி லாஸ்ட் ஆஃப் அஸ்" தொடரில் வரும் நோயைக் கட்டுப்படுத்தும் காட்சிகளைப் போல, எந்தவொரு நடவடிக்கையும் இல்லை. பல பூஞ்சை இனங்களின் அச்சுறுத்தல்களைக் கவனிப்பது ஒரு கடினமான பணியாகும். இதையெல்லாம் கண்காணிக்க உலகில் போதுமான மைக்கோலஜிஸ்டுகள் இல்லை. அவர்களில் அதிகமானவர்களுக்கு பயிற்சி அளிப்பது, பூஞ்சை எதிர்ப்பு போராட்டத்துக்கான ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும்.

பூஞ்சைகள் நமக்கு எவ்வளவு ஆபத்தை தருகிறதோ, அதே அளவு நன்மைகளையும் அளிக்கின்றன. உலகின் முதல் ஆண்டிபயாடிக்கான பென்சிலின் பூஞ்சை தொற்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டதே ஆகும். இதுபோல் இன்னும் வேறு என்னவெல்லாம் நன்மைகளை பூஞ்சைகள் தங்களுக்குள் வைத்திருக்கிறதென யாருக்குத் தெரியும்?. பாக்டீரியா அல்லது வைரஸ்களைப் போலவே, பூஞ்சைகளும் பழமையானவை. அவை எல்லா இடங்களிலும் உள்ளன. அவற்றை குறைத்து மதிப்பிடுவது தவறு.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com