அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் 2023ம் ஆண்டு நடைபெறவுள்ள திருமதி உலக அழகி போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் பிளாரன்ஸ் ஹெலன் நளினி பங்கேற்கவுள்ளார்.
திருமதி உலக அழகி போட்டி (Ms.International World People's Choice Winner 2022) என்பது திருமணமான பெண்களின் சாதனைகளை உலகம் முழுவதும் எடுத்துச் சொல்லும் போட்டியாகும். 1984-ம் ஆண்டு முதல் திருமதி உலக அழகி போட்டி நடத்தப்பட்டு வருகிறது. தற்போது நடைபெறும் இந்த போட்டியில் 70க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து பல சாதனைகளைச் செய்த பெண்கள் கலந்துகொள்ள உள்ளனர். வரும் ஜூலை மாதம் 17ஆம் தேதி முதல் ஜூலை 22ஆம் தேதி வர நடைபெறும் இந்த போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த பிளாரன்ஸ் ஹெலன் நளினி பங்கேற்கிறார்.
திருமதி உலக அழகி போட்டி!
பல சுற்றுகளாக நடைபெறும் இந்தப் போட்டியில் விளையாட்டான சுற்றுகளும் உண்டு. தீவிரமான சுற்றுக்களும் உண்டு. இதில் தீவிரமான சுற்றுகளுக்கு மட்டுமே மதிப்பெண்கள் கொடுக்கப்படும்.
இந்த சுற்றில்,
உடற்தகுதிச் சுற்று,
தனிநபர் நேர்காணல் சுற்று,
ஈவினிங் கவுன் சுற்று என மூன்று வகையில் நடத்தப்படுகின்றன.
1. உடற் தகுதிச் சுற்றில் நம் உடல் பராமரிப்பு, தன்நம்பிக்கை மனதிடம் ஆகியவை பார்க்கப்படும். இதற்கு 25% மதிப்பெண்கள் உண்டு.
2. தனிநபர் நேர்காணல் சுற்று ;- இதில் 5 நீதிபதிகள் இருப்பர். 5 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விக்கும் 5 நிமிடங்களுக்கு நாம் பதில் சொல்ல வேண்டும். இதற்கு 50% மதிப்பெண்கள் உண்டு.
3. ஈவினிங் கவுன் சுற்று எனப்படும் ஆடை அலங்காரச் சுற்று. இதில் பெண்கள் தங்களுடைய கணவருடன் பங்கேற்க வேண்டும். இதில் ஒரு கணவன் பெண்களுக்கு எப்படி ஆதரவாக இருக்கிறார் என்பதை காட்டும் சுற்று.
இதைத்தவிர, Bath bomb making, Axe throwing, சோப் மேக்கிங், பேஸ்பால், வைன் இன் வெட்ஜெஸ் என்கிற ஜாலியான சில சுற்றுக்களும் உண்டு. இதற்கு மதிப்பெண்கள் கிடையாது.
தீவிரமான சுற்றுக்களிலிருந்து 16 பேர் தேர்வு செய்யப்படுவர். அவர்கள் 16 பேரும் சமூக பிரச்சனைகள் குறித்த தலைப்புகளைத் தேர்வு செய்து, அந்தச் சமூக பிரச்சனைகள் பற்றியும், அதை மாற்றுவதற்கு அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் பற்றியும் 30 நொடிகளில் பேச வேண்டும். பிறகு அவர்கள் அதிலிருந்து கேள்வி எழுப்புவார்கள்.
அந்தக் கேள்விகளுக்கு 30 நொடிகளில் நாம் பதில் சொல்ல வேண்டும். சுற்றின் முடிவில் இதிலிருந்து 5 பேர் தேர்வு செய்யப்படுவர். அவர்களுக்கு இறுதிப் போட்டி வைக்கப்பட்டு, வெற்றியாளரைத் தேர்வு செய்வர்.
பிளாரன்ஸ் ஹெலன் நளினி!
கோவையை சொந்த ஊராக கொண்டிருந்தாலும், படித்து, வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். இவருக்கு திருமணமாகி இரு பெண் குழந்தைகள் உள்ளனர். எளிய குடும்பத்தில் பிறந்த பிளாரன்ஸ் ஹெலன் நளினி மனநல சிகிச்சை நிபுணர், தொழில் முனைவோர், எழுத்தாளர், மொழி பயிற்றுனர், யோகா பயிற்சியாளர் என பன்முக திறமையால் ஆளுமை கொண்டவர். 2021-ம் ஆண்டு அமெரிக்க-இந்திய கூட்டு முயற்சியால் நடைபெற்ற ‘மிஸஸ் இண்டர்நேஷனல் வேர்ல்ட் கிளாசிக்’ அழகிப் போட்டியில் பிளாரன்ஸ் ஹெலன் நளினி பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். அதேபோல், ‘கிளாமரஸ் அச்சீவர்’ என்ற துணைப் பிரிவிலும் பட்டத்தை வென்று அசத்தினார்.
கடந்த ஆண்டு அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி நகரில் நடைபெற்ற திருமதி உலக அழகி போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்ற தமிழகத்தைச் சேர்ந்த பிளாரன்ஸ் ஹெலன் நளினி "Miss International world people's Choice winner 2022" என்ற பட்டத்தை வென்று அசத்தியுள்ளார். இந்த ஆண்டும் நடைபெறும் போட்டியில் பங்கேற்கும் இவர், "குழந்தைகளின் கல்வி மற்றும் கல்வி உரிமை" ஆகிய சமூக பிரச்சனைகளை தேர்ந்தெடுத்து பேசவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கூறியுள்ள அவர், வெற்றி வேண்டும் என்றால் வலியை அனுபவிக்க வேண்டும். இந்தப் போட்டிகளுக்காக தினமும் உடற்பயிற்சி, யோகா, நடைபயிற்சி, தியானம் ஆகியவற்றை தொடர்ந்து செய்து வருகிறேன். கொரோனாவால் பாதிக்கப்பட்டபோது, மரணப் படுக்கைக்குச் சென்றுவிட்டேன். அப்போது என்னை உயிர்ப்புடன் வைத்தது யோகாவும், நம்பிக்கையும்தான். போட்டிக்காக மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் ஆகிய இரண்டுக்கும் உடலைப் பராமரிப்பது அவசியம் என்று கூறியுள்ளார்.
படிப்பு, சாதனைகள்..
Life Science, Public Administration, MBA Marketing and HR, MSc Psychology, MA English Literature, Doctor of Public Administration, Doctor of Philosophy என எண்ணற்ற படிப்புகளை முடித்த இவர், உளவியலில் மட்டும் 100க்கும் மேற்பட்ட சான்றிதழ்களை வாங்கியுள்ளார். Life Skill பயிற்சியாளர், யோகா பயிற்சியாளர் என இவரின் சாதனைகள் தொடர்ந்து கொண்டே செல்கிறது. Women Face of the year, Fox Story-ன் 50 ஆளுமை செலுத்தும் பெண்கள் விருது, சுகாதாரத்துறையில் ஈடுபடும் 50 பெண்கள் விருது, ஃபெமினாவின் தென் இந்திய பெண் விருது, சிறந்த கல்வியாளர், உளவியலாளர், தொழில் வல்லுநர், மாற்றத்தை விதைப்பவர், சிறந்த பெண் தொழில் வல்லுநர், அழகும், அறிவும் கொண்ட பெண் விருது, கெளரவ் புரஸ்கார் விருது என பல விருதுகளை பெற்றுள்ளார். தனது சாதனைகளுக்காக வாங்கி குவித்துள்ள விருதுகளை வைக்கவே தனி மண்டபம் கட்ட வேண்டும் என நகைச்சுவையாகக் கூறியுள்ளார் புளோரன்ஸ்.
”சிறு வயதில் என் தந்தையால் என்னைப் படிக்க வைக்க முடியவில்லை. குழந்தைகளின் கல்விக்காக உதவி செய்ய வேண்டும் அதுவே தன் லட்சியம், இந்தியாவில் பிறக்கும் அனைவரும் பட்டதாரியாக வேண்டும். இந்தியா கல்வித் தரத்தில் மிகச் சிறந்த நாடாக இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த ஆண்டு நடைபெறும் திருமதி உலக அழகி போட்டியில் அவர் வெற்றி பெற வாழ்த்துகள்!