‘32 வருஷத்துக்குப்பின் படிக்க வர்றேன்’- தமிழக அரசின் முன்னெடுப்பால் நிறைவேறிய புதுமைப்பெண்ணின் கனவு!

தமிழக அரசின் புதுமைப்பெண் திட்டத்தால் 32 ஆண்டுகளுக்கு பிறகு கரூரில் பெண் ஒருவர் படிக்க வந்துள்ளார்.

கரூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் கவிதா. 47 வயதான இவருக்கு கல்லூரியில் படிக்கும் மகன் மற்றும் மகள் உள்ளனர். தினசரி மகனையும் மகளையும் கல்லூரிக்கு அனுப்பிவந்த இவர், தற்போது தானும் பாட புத்தகங்களை எடுத்துக்கொண்டு கரூரில் உள்ள ஐ.டி.ஐ.க்கு படிக்க செல்கிறார். இவர் பெறுவது, தையல் குறித்த ஐடிஐ பயிற்சியை!

கவிதா
கவிதாPT Tesk

தமிழக அரசின் புதுமைப்பெண் திட்டம்தான் இவரை 32 ஆண்டுகளுக்கு பிறகு படிக்கத் தூண்டியுள்ளதாம்! தமிழக அரசின் இந்த திட்டத்தின் கீழ் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வியில் படித்த மாணவிகளுக்கு உயர் கல்வி படிப்பதற்காக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் குறித்து கேள்விப்பட்ட கவிதா 32 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ஐ.டி.ஐ.யில் தையல் பயிற்சி படித்துக் கொண்டு மாதம் 1,000 ரூபாய் அரசின் ஊக்கத் தொகையையும் பெற்று வருகிறார்.

படிப்புடன்… பணமும்…

இதுகுறித்து கவிதா கூறுகையில், ''பத்தாம் வகுப்புக்கு மேல் படிக்க பெற்றோர் அனுமதிக்காத காரணத்தால் படிப்பை கைவிட நேர்ந்தது. ஒரு சில ஆண்டுகளில் திருமணமும் நடந்தது. கிட்டத்தட்ட நான் பாடப்புத்தகங்களை தொட்டு 32 ஆண்டுகள் ஆகிறது. தற்பொழுது எனது மகன், மகள் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழக அரசின் புதுமைப்பெண் திட்டத்தில் மாதம் ஆயிரம் ரூபாய் அரசு அளிப்பதாக கேள்விப்பட்டேன். திட்டம் பற்றி விசாரித்தபோது, ஆறாம் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும் என்று சொன்னார்கள். வயது வரம்பு இல்லை என்று கூறினார்கள். இதையடுத்து நான் கரூரில் உள்ள அரசு தொழில் பயிற்சி கல்லூரியில் சேர்ந்து தற்போது தையல் பயிற்சியை பெற்று வருகிறேன். பெண்கள் வீட்டை விட்டு வெளியே வந்து தேடினால் நிறைய வாய்ப்புகள் காத்திருக்கு'' என்றார்.

கரூர் ஐடிஐ
கரூர் ஐடிஐJUSTIN

மாதம் 1,000 உதவித் தொகையால், கவிதாவை போல கல்வி ஆர்வமுள்ள பல புதுமைப் பெண்கள் கல்லூரியில் சேர்ந்து வருவதாக சொல்கிறார் ஐடிஐ முதல்வர் மாரீஸ்வரன். அதேபோல் தையல் பயிற்சியாளர் தேன்மொழி கூறுகையில், ''60 வயது வரை உள்ள பெண்கள் கூட தையல் கற்றுக் கொள்ள வருகின்றனர். தையல், எம்ராய்டரி, ஆரி வேலைகள் உள்ளிட்டவை குறித்து இலவசமாக பயிற்சி அளிப்பதால் நிறைய பெண்கள் ஆர்வம் காட்டுகின்றனர்'' என்றார்

''20 வருஷம் கழித்து படிக்க வந்தாலும் சுலபமா புரிய வைக்கிறார்கள். பல ஆண்டுகள் கழித்து படிப்பதுபோல தோன்றவில்லை'' என்கிறார் கவிதாவை போலவே படிப்பை சிறுவயதில் நிறுத்திவிட்டு, 20 ஆண்டுகளுக்குப் பிறகு படிக்க வந்த கோகிலவாணி!

கல்வி எனும் பேராயுதம், பெண்ணுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை நிரூபிக்கிறார்கள் இந்த புதுமைப்பெண்கள்!

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com