சென்னை | மோப்ப நாய் உதவியுடன் நாட்டு வெடிகுண்டு பறிமுதல் - விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்
செய்தியாளர்: சாந்த குமார்
சென்னை ஆதம்பாக்கம், வாணுவம்பேட்டை திருமலை தெருவில் பார்த்திபன் (24), என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டில் நாட்டு வெடிகுண்டு புதைத்து வைக்கப்பட்டிருப்பதாக ஆதம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன், மடிப்பாக்கம் உதவி ஆணையர் முத்துராஜா தலைமையில் நாட்டு வெடிகுண்டைதேடினர்.
அப்போது மோப்ப நாய், வீட்டின் பின்புறம் சென்று குரைத்ததன் அடிப்படையில் அந்த இடத்தில் பள்ளம் தோண்டி நாட்டு வெடிகுண்டை பறிமுதல் செய்து மணல் நிரப்பிய வாளியில் வெடிகுண்டு நிபுணர்கள் எடுத்துச் சென்றனர். இதையடுத்து பார்த்திபனை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், பார்த்திபனின் நண்பர் வினித், தனது தம்பி தனுஷை கடந்த ஆண்டு சிலர் கொலை செய்ததாகவும் அவர்களை பழி தீர்க்க நாட்டு வெடிகுண்டை பதுக்கி வைக்க பார்த்திபனிடம் கொடுத்ததாக வாக்குமூலம் அளித்தார். இந்த நாட்டு வெடிகுண்டு கையெறி குண்டாக பயன்படுத்துவது என்றும் தூக்கி எறிந்தால் வெடிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து ஆதம்பாக்கம் போலீசார் வினித்தை தேடி வருகின்றனர். நாட்டு வெடிகுண்டை தேடி போலீசார் மோப்ப நாயுடன் தெருவில் வலம் வந்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.