‘தோனி கொடுத்த டிப்ஸாக இருக்குமோ.. மின்னல் வேகத்தில் தாவிசென்று கேட்ச் பிடித்த பரத்’ -மிரண்ட வார்னர்!
லண்டன் ஓவல் மைதானத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இன்று தொடங்கியுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தப் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி, பவுலிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்து, ஆஸ்திரேலிய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக, டேவிட் வார்னர் மற்றும் உஸ்மான் கவாஜா களமிறங்கினர். முதல் ஓவரை முகமது ஷமியும், இரண்டாவது ஓவரை முகமது சிராஜூம் வீசிய நிலையில் அந்த இரண்டு ஓவர்களில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களால் ரன் எதுவும் எடுக்க முடியவில்லை. முகமது ஷமி வீசிய 3-வது ஓவரில் 2 ரன்கள் மட்டுமே ஆஸ்திரேலிய அணி எடுத்த நிலையில், 4-வது ஓவரை முகமது சிராஜ் வீசினார்.
9 பந்துகளை சந்தித்து ஒரு ரன் கூட எடுக்க முடியாமல் தடுமாறிய கவாஜா, முகமது சிராஜ் வீசிய 4வது ஓவரின் 4வது பந்தில் விக்கெட் கீப்பரிடம் எட்ஜ் கொடுத்து டக் அவுட்டாகி சென்றார். இதனையடுத்து, வார்னருடன், ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள மார்னஸ் லபுஷேன் கைகோர்த்தார். எனினும், முகமது சிராஜ் மற்றும் முகமது ஷமி பெரிதாக ரன்கள் விட்டுக்கொடுக்காமல் பந்துவீசி வந்தனர். 12 ஓவர்கள் முடிந்த நிலையில், முதல் தேநீர் இடைவேளைக்குப் பிறகு உமேஷ் யாதவ் பந்து வீச வந்தார். அதன்பிறகு டேவிட் வார்னர் சற்று அதிரடி காட்ட, 15-வது ஓவரில், டி20 போட்டியை போன்று 4 பவுண்டரிகள் அடித்து ஆடினார்.
குறிப்பாக இரண்டாவது விக்கெட்டுக்கு 69 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவுக்கு சவாலாக நின்றனர் வார்னரும், லபுஷேனும். எனினும், ஷர்துல் தாக்கூர் பந்து வீசிய 22-வது ஓவரின் 4-வது பந்து ஸ்விங் ஆகி வந்ததை கவனிக்க தவறியதால், விக்கெட் கீப்பர் கே.எஸ்.பரத்திடம் கேட்ச் கொடுத்து, 43 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். டேவிட் வார்னர் பவுண்டரி அடிக்க முயற்சித்த நிலையில், பந்து பேட்டில் தட்டிச் செல்ல, விக்கெட் கீப்பர் கே.எஸ். பரத் மின்னல் வேகத்தில் தாவிச் சென்று கேட்ச் பிடித்தார். அப்போது, அந்த கேட்ச்சை எதிர்பாராத டேவிட் வார்னர், களத்தில் சற்று ஸ்ட்ன்னாகி வெளியேறினார்.
போட்டிக்கு முன்னதாக, ஐசிசிக்கு அளித்திருந்த பேட்டியில், “நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியின்போது, தோனியுடன் பேசி இருந்தேன். இங்கிலாந்தில் அவரது விக்கெட் கீப்பிங் அனுபவத்தை அப்போது என்னிடம் அவர் பகிர்ந்து கொண்டார். அதேநேரத்தில் பொதுவாக விக்கெட் கீப்பர்களுக்கு தகுந்த சில விஷயங்கள் குறித்தும் பேசினார். அது நல்லதொரு உரையாடலாக அமைந்தது. அதிலிருந்து நான் நிறைய உள்ளார்ந்த படிப்பினை பெற்றேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒவ்வொரு நாளும் வீசப்படும் 90 ஓவர்களையும், ஒவ்வொரு பந்தாக விக்கெட் கீப்பர் கவனிக்க வேண்டும். இது ஆர்வம் இருந்தால் மட்டுமே சாத்தியம்” என்று கூறியிருந்த நிலையில், இன்று அவரது விக்கெட் கீப்பிங் சிறப்பாக இருப்பதாக கிரிக்கெட் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இரண்டாவது தேநீர் இடைவெளிக்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணி, 3 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் சேர்த்திருந்தது.