“சிறிய வழி கிடைத்தாலும் பலமாக மாற்றுவார்கள் ; பேட்டர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்”- விராட் கோலி
“3 போட்டிகள் கொண்டதாக WTC ஃபைனல் இருந்திருக்கலாம்!” - விராட் கோலி
இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த டெஸ்ட் கேப்டன்களில் ஒருவராக கருதப்படும் விராட் கோலியின் தலைமையில், 2021-ஆம் ஆண்டு நடந்த ‘முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்’ இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறியது. டெஸ்ட் வடிவத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் WTC முதல் முறையாக 2021-ல் நடத்தப்பட்டது. முதல் WTC என்பதாலும், போட்டியின் போது மழை குறுக்கிட்டதாலும் இந்திய அணியின் கைகளில் இருந்த வெற்றியை, நியூசிலாந்து அணி தட்டிச்சென்றது. அப்போட்டி தொடங்கும் வரையிலும் இந்திய அணி தான் கோப்பையை வெல்ல போகிறது என்று எல்லோராலும் சொல்லப்பட்டது. போட்டியின் முடிவிற்கு பிறகு கூட போட்டியில் மழை குறுக்கிட்டதால் தான் இந்தியா தோல்வியடைந்ததாக பல முன்னாள் வீரர்கள் கூறியிருந்தனர்.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, ஏற்கெனவே 2019 ஒருநாள் உலக கோப்பையையும் இறுதிவரை முன்னேறி தவறவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் அடைந்த தோல்விக்கு பிறகு பேசியிருந்த விராட் கோலி, “உலக டெஸ்ட் ஃபைனல் என்பது ஒரேயொரு போட்டியாக இல்லாமல் 3 போட்டிகள் கொண்ட ஒரு தொடராக இருந்திருக்கலாம்” என விரக்தியில் பேசியிருந்தார்.
“பேட்டர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!” - விராட் கோலி
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில், தற்போது இரண்டாவது முறையாக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி WTC ஃபைனலுக்கு முன்னேறியுள்ளது. இந்நிலையில் முதல்முறை தோல்வியடைந்ததை போன்று தற்போதும் நடந்துவிடக்கூடாது என இந்திய அணி வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் விராட் கோலி.
கடந்த முறை ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில், 3 வருட பெரிய இடைவெளிக்கு பிறகு தனது 28ஆவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார் விராட் கோலி. தற்போது ஒருநாள் போட்டிகள், டி20 மற்றும் ஐபிஎல் என அனைத்திலும் ரன்களை குவித்துவரும் விராட் கோலி, ஒரு இன்-ஃபார்ம் பேட்ஸ்மேனாக WTC இறுதிப்போட்டியில் விளையாட உள்ளார்.
இந்நிலையில் இறுதிப்போட்டி குறித்து பேசியிருக்கும் விராட் கோலி, “ஓவல் மைதானம் சவாலானதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். எங்களுக்கு ஒருபோதும் ஃபிளாட் விக்கெட் கிடைக்கப்போவவதில்லை, அதனால் பேட்டர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அனைத்து வீரர்களும் பேட்டிங் மற்றும் அதன் ஒழுக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.
“ஒரேயொரு போட்டி மட்டுமே உள்ளது, மறக்க வேண்டாம்!”- விராட் கோலி
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் உடனான நேர்காணலில் பேசியிருக்கும் விராட் கோலி, "மைதானத்தின் தன்மைக்கு ஏற்ப விளையாடும் அனுபவத்தை வீரர்கள் பெற்றிருக்க வேண்டும். அதைவிடுத்து ஓவல் ஆடுகளம் எப்போதும் போலவே செயல்படும் என்ற எதிர்பார்ப்புடன் நீங்கள் செல்லக்கூடாது. ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப நீங்கள் உங்களை மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியமானதாகும்.
இரண்டு அணிகளுக்கும் சாதகம் இல்லாத வகையில், நடுநிலையான மைதானத்தில் விளையாடுவது சிறப்பானது என்று நினைக்கிறேன். இதுதான் டெஸ்ட் போட்டியின் அழகும் கூட. அதுவே இங்கு நடந்துள்ளது.
இங்கு இப்போது ஒரே ஒரு போட்டி மட்டுமே உள்ளது. அதில் யார் சிறப்பாக விளையாடுகிறார்களோ அவர்களே கோப்பையை வெல்வார்கள். இரு அணிகளும் சூழ்நிலைக்கு ஏற்ப எவ்வாறு தங்களை மாற்றிக்கொண்டு விளையாட தயாராவதை பார்க்கிறபோது, மிகவும் உற்சாகமாக உள்ளது” என்று கோலி மேலும் கூறியுள்ளார்.
“சிறிய கேப் கிடைத்தாலும் முழு வேகத்தோடு உள்ளே வந்துவிடுவார்கள்!”- விராட் கோலி
இப்பேட்டியில் நாக் அவுட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கம் எப்படி இருக்கும் என்றும், அவர்களை எளிதாக எடுத்துவிடக்கூடாது என்றும் தெரிவித்திருக்கும் விராட் கோலி ஆஸ்திரேலிய அணியை பாராட்டியும் உள்ளார். ஆஸ்திரேலியா குறித்து பேசியிருக்கும் அவர், “ஆஸ்திரேலிய அணி எப்போதும் எதிர்த்து விளையாட மிகவும் கடினமான ஒரு அணி. நீங்கள் அவர்களுக்கு ஒரு சிறிய கேப்பைக் கொடுத்தால் கூட, அவர்கள் முழு வேகத்தோடு உடைத்துக்கொண்டு உள்ளே வருவார்கள். அந்தளவு அவர்கள் தங்களுடைய திறமையை உயரத்தில் வைத்திருக்கிறார்கள். அதனால்தான் நான் மோட்டிவேஷன் அதிகம் கொடுக்கிறேன்.
அவர்களை போன்ற ஒரு அணியை வீழ்த்த வேண்டும் என்றால் நான் என்னை இன்னும் அதிகப்படியான திறமையோடு வெளிக்கொண்டுவர வேண்டியிருக்கிறது. அவர்களுக்கு எதிரான நமது ஆட்டம் அடுத்த கட்டத்திற்கு இருந்தால் மட்டும் தான் நம்மால் ஆஸ்திரேலியாவை தோற்கடிக்க முடியும். ஆக நான் என்னுடைய ஆட்டத்தை மேலும் உயர்த்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.