விராட் கோலிக்கு 10% அபராதம் விதிப்பு.. எதற்காக இந்த ஃபைன்.. மைதானத்தில் நடந்தது என்ன?
ஐபிஎல் தொடரில் நேற்று இரவு பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ். 227 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய பெங்களூரு அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி கண்டது.
நேற்றையப் போட்டியில் பெங்களூர் அணியின் முன்னாள் கேப்டனும், அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரருமான விராட் கோலிக்கு ஆட்டத்தின் சம்பளத்தில் 10 சதவிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐபிஎல் நடத்தை விதிகளின் பிரிவு 2.2-ன் கீழ் லெவல் 1 குற்றத்தை விராட் கோலி ஒப்புக்கொண்டார். லெவல் 1 நடத்தை விதிகளை மீறினால், மேட்ச் ரெஃப்ரியின் முடிவே இறுதியானது என்பதால் அவருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த விதிமுறையின்படி விராட் கோலியிடம் எந்த விளக்கமும் கேட்கப்படாது, விசாரணையும் நடைபெறாது. இதற்கு அடுத்தகட்ட விதிமீறல் என்றால் மட்டுமே போட்டி கட்டணம் முழுமையாக ரத்து மற்றும் விசாரணை எல்லாம் நடைபெறும்.
மைதானத்தில் என்ன நடந்தது?
பொதுவாகவே மைதானத்தில் ஆக்ரோஷமாக செயல்படுபவர் விராட் கோலி. சாதாரணமாக விக்கெட் வீழ்ந்தால் கூட மிகவும் ஆர்ப்பரித்து மைதானத்தில் தன்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்துவார். சென்னை அணிக்கு எதிரான போட்டியில் இரண்டு இடங்களில் அவர் மிகவும் ஆக்ரோஷமாக சத்தமிட்டார். ஒருவேளை அந்த இரண்டு இடங்களும் இந்த அபராதம் விதிப்புக்கு காரணமாக இருக்கலாம் என்று தெரிகிறது. ஐபிஎல் நிர்வாகத்தை பொறுத்தவரை விதிகளை மட்டுமே சொல்வார்கள். குறிப்பிட்டு காரணத்தை சொல்லமாட்டார்கள்.
ஷிவம் துபே ஆட்டமிழந்த போது..
சென்னை அணியின் பேட்ஸ்மேன் ஷிவம் துபே விக்கெட் ஆனபோது விராட் கோலி அதை ஆக்ரோஷமாக கொண்டாடினார். அதற்கு காரணம் ஷிபம் துபேவின் அதிரடியான ஆட்டம்தான், சென்னை அணி 200 ரன்களை கடக்க உதவியது. ஷிவம் துபே களத்தில் இருந்தவரை சென்னை அணியின் ரன் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. சிக்ஸர், பவுண்டரிகளாக பறக்கவிட்டார். அதனால், ஷிவம் துபேவின் விக்கெட் ஆர்சிபி-க்கு பிரேக் துரோவாக இருந்தது. அதனால், விராட் கோலி மிகவும் ஆக்ரோஷமாக ஆர்ப்பரித்தார்.
ருதுராஜ் ஆட்டமிழந்த போது..
அதேபோல் சிஎஸ்கே வீரர் ருதுராஜ் ஆட்டம் இழந்த போதும் களத்தில் பயங்கரமாக கத்தி கூச்சல் போட்டார். நடப்பு ஐபிஎல் சீசனில் தொடக்க ஆட்டங்களில் ருதுராஜ் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்து வந்தார். அவர் களத்தில் நீடித்துவிட்டால் நிச்சயம் ரன்குவிப்பு வேகமாக நடைபெறும். அதனால், ருதுராஜ் விக்கெட் வீழ்ந்தது விராட் அதனை கொண்டாடினார். இதுபோன்ற நிகழ்வுகள் விராட் கோலிக்கு அபராதம் விதிக்க காரணமாக இருந்திருக்கலாம். வழக்கமாகவே களத்தில் மிகவும் ஆக்ரோஷமாக செயல்படக் கூடியது விராட் கோலி. சில நேரங்களில் அது எதிரணி வீரர்களுக்கும், ஒரு வீரராக நடத்தை பண்புக்கு மீறியதாக இருக்கும் என்பதை கடந்த காலங்களில் பார்த்திருக்கிறோம். அதேபோன்று நேற்றைய போட்டியில் அவர் நடந்து கொண்ட விதம் அபராதம் விதிப்பு வரை சென்றுள்ளது.
மும்பை வீரருக்கும் இதேபோன்று அபராதம்!
இதேபோன்று, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வீரர் ஹிருத்திக் ஷோக்கீனுக்கு ஐபிஎல் நடத்தை விதிகளின் பிரிவு 2.2-ன் கீழ் லெவல் 1 குற்றத்திற்காக அபராதம் விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. நிதிஷ் ரானா ஆட்டமிழந்த போது அவர் நடந்து கொண்ட விதத்திற்காக அந்த அபராதம் விதிக்கபட்டிருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.