திருச்சி: 6 வருடங்களுக்கு பின் பிள்ளைகளுடன் அன்புகரம் கோர்த்த தெலங்கானா மூதாட்டி!
தெலங்கானாவை சேர்ந்த மூதாட்டி ஒருவர் ஆறு ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன நிலையில், தற்போது திருச்சியில் மீட்கப்பட்டுள்ளார். பரிதவித்திருந்த பிள்ளைகள், தாயை கண்டு உள்ளம் நெகிழ்ந்தனர்.
தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த விஜயா என்பவர் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். இவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், தாயை பிரிந்த வேதனையில் அவரது பிள்ளைகள் வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் தான், அண்மையில் தாய் கிடைத்த சந்தோஷ செய்தி கிடைத்துள்ளது.
சாலையில் சுற்றித்திரிந்த ஆதரவற்றவர்களை திருச்சி காவல்துறையினர் மீட்டு காப்பகத்தில் சேர்த்துள்ளனர். அதில் தெலங்கானாவில் காணாமல் போன விஜயாவும் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, தற்போது தாயையும் , அவரது பிள்ளைகளையும் சேர்த்து வைத்துள்ளனர்.
குடும்பத்தில் உள்ளவர்கள் மன அழுத்தத்தில் இருந்தாலோ, சாலையில் யாராவது ஆதரவற்று இருந்தாலோ அவர்களிடம் மன விட்டுப் பேசினால், வாழ்க்கையை மீட்டுத் தர முடியும் எனத் தெரிவிக்கின்றனர் ஆதரவற்றவர்களை பராமரித்து வரும் தொண்டு நிறுவனத்தினர்.
பணம், பொருள் என தேடி ஓடி அலைந்து கொண்டிருக்கும் , மனித வாழ்வில் நிரந்தரமானது அன்பு மட்டுமே என்பதை உணர்த்தியுள்ளது இந்த நெகிழ்ச்சி சம்பவம்.