அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டதன் பின்னணி என்ன? – விரிவான அலசல்
அதிமுக ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் தமிழ்மகன் உசேன் அக்கட்சியின் தற்காலிக அவைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழ்மகன் உசேன் யார்? அவர் தேர்வு செய்யப்பட்டதற்கான பின்னணியை விரிவாகப் பார்க்கலாம்.
தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் எம்.ஜி.ஆர் மன்றச் செயலாளராகவும், ஆட்சிமன்றக் குழு உறுப்பினராகவும், வக்ஃபு வாரியத்தின் முன்னாள் தலைவராகவும் இருந்த தமிழ்மகன் உசேன் தற்காலிக அவைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவைத்தலைவராக இருந்த மதுசுதனன் உடல்நலக்குறைவால் காலமானதை அடுத்து, அதிமுகவின் அடுத்த அவைத்தலைவர் யார் என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில், இன்றைய செயற்குழு கூட்டத்துக்கு தலைமை தாங்கிய அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியும், 260க்கும் மேற்பட்ட உறுப்பினர்களின் ஒப்புதலுடன் தமிழ்மகன் உசேனை தற்காலிக அவைத்தலைவராக அறிவித்தனர். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உழைக்கும் ஒவ்வொரு தொண்டனுக்கும் மதிப்பு கொடுக்கும் கட்சி அதிமுக என பெருமிதம் தெரிவித்தார்.
அதிமுகவின் நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர் காலகட்டத்தில் அவருக்கு ரசிகர் மன்றத்தை உருவாக்கி தீவிர ஆதரவாளராக செயல்பட்டவர் தமிழ்மகன் உசேன். 50 ஆண்டுகால அரசியல் வாழ்வில் அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்த அவர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டவர். இவர் தற்காலிக அவைத்தலைவராக நியமிக்கப்படுவதற்கு, அதிமுகவில் சிறுபான்மையினர் புறக்கணிக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டே காரணம் என பேசப்படுகிறது. முன்னாள் அமைச்சர் நிலோஃபர் கபில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது, ஜெ.எம்.பஷீர் எனும் நிர்வாகியின் நீக்கம், அதிமுக தலைமைக்கு எதிராக செயல்பட்டதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா நீக்கப்பட்டது என என அடுத்த நடவடிக்கைகள் சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி அதிமுக என்ற பிம்பத்தை ஏற்படுத்தியது. அதனை சரி செய்யும் வகையிலேயே தற்காலிக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது. செயற்குழுவில் தற்காலிக அவைத்தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள தமிழ்மகன் உசேன், பொதுக்குழுவின் ஒப்புதலுக்குப்பின் அவைத்தலைவராக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைப்படிக்க...மாணவிகளை செல்போனில் படமெடுத்த இளைஞர்: காவல் நிலையத்தில் ஒப்படைத்த மாணவர்கள்