21.18 அடியை எட்டிய செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம்: உபரி நீரை திறக்க முடிவு?
செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் இருப்பு 21 அடியை கடந்துள்ள நிலையில் ஏரி 23 அடியை தொட்டவுடனே உபரி நீரைத் திறக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
கடந்த சில தினங்களாக சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த வகையில் செம்பரம்பாக்கம் ஏரியின் தற்போதைய நீர்மட்ட உயரம் 21.18 அடியாகவும், மொத்த கொள்ளளவு 2,903 மில்லியன் கன அடியாகவும், நீர் வரத்து 335 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 148 கன அடியாகவும் உள்ளது. மேலும் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் நவம்பர் மாதத்தில் கூடுதலாக மழை பெய்யும் என்பதால் 22 அடிவரை நீரை தேக்கி வைக்கவும், டிசம்பர் மாதத்திற்கு பின்பு அதிக மழை இருக்காது என்பதால் டிசம்பர் மாதத்தில் 23 அடி வரை நீரை தேக்கி வைக்கவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
குறிப்பாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 23 அடியை தொட்டவுடன் உபரி நீரைத் திறக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் அதிக அளவில் உபரி நீரை திறக்காமல் மெல்ல மெல்ல தண்ணீரை வெளியேற்றுவதற்கு அதிகாரிகள் முடிவு செய்திருப்பதும், ஏரியில் தங்குதடையின்றி உபரி நீர் செல்வதற்காக ஏரிக்குள் படர்ந்திருக்கும் ஆகாயத்தாமரை மற்றும் ஏரியில் இருந்து உபரி நீர் செல்லும் கால்வாய்களில் உள்ள செடிகளை அகற்றும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.