கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் திருநங்கைகளுக்கு பணி
சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் முதல்முறையாக இரண்டு திருநங்கைகள் ஊழியர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளனர். கொரோனா காலத்தில் வேலை கிடைக்காமல் தவித்து வந்தவர்கள் இன்று மனநல மருத்துவமனையில் சேவையாற்றுகின்றனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் திருநங்கைகளான வைஷ்ணவி தூய்மை பணியாளராகவும், மனிஷா தகவல் பரிமாற்ற அலுவலகத்திலும் வேலை செய்கிறார்கள். கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் திருநங்கை உதவித்தொகைக்கான சான்றிதழ் வாங்க வந்தபோது, வேலைகிடைக்காமல் கடந்த 2 ஆண்டுகளாக அவதிப்பட்டுவருவதை மனநல காப்பகத்தின் இயக்குனர் பூர்ண சந்திரிகாவிடம் கூறியுள்ளனர்.
அதை கேட்ட இயக்குனர் உடனடியாக இரு திருநங்கையரையும் ஒப்பந்த பணியாளராக பணியமர்த்தியுள்ளார். இந்த வாய்ப்பு தங்கள் வாழ்க்கையை மாற்றியிருப்பதாக கூறுகிறார்கள் இரண்டு திருநங்கைகளும். வரும் காலங்களில் அரசு அனுமதியுடன் மேலும் சில திருநங்கைகளை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மன ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வரும் கீழ்ப்பாக்கம் மனநல காப்பகம், சமூகத்தில் பின்தங்கிய திருநங்கைகளுக்கு அளித்துள்ள இந்த வாய்ப்பு, சிறந்த முன்னெடுப்பாகவே பார்க்கப்படுகிறது.