கடையில் பொரிக்கப்பட்ட மீனை சாப்பிட்ட 2 குழந்தைகள் உயிரிழப்பு: ஃபுட் பாய்சன் காரணமா?

கடையில் பொரிக்கப்பட்ட மீனை சாப்பிட்ட 2 குழந்தைகள் உயிரிழப்பு: ஃபுட் பாய்சன் காரணமா?
கடையில் பொரிக்கப்பட்ட மீனை சாப்பிட்ட 2 குழந்தைகள் உயிரிழப்பு: ஃபுட் பாய்சன் காரணமா?

வேலூரில் பொரித்த மீன் சாப்பிட்டு வாந்தி எடுத்த குழந்தைகளுக்கு மருத்துவ பரிந்துரையின்றி மருந்து வாங்கிக்கொடுத்ததால், அக்குழந்தைகள் உயிரிழந்துள்ள சோகம் நடந்துள்ளது.

வேலூர் கஸ்பா பஜார் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் அன்சர் - சுரேயா தம்பதிக்கு 4 வயதில் ஆஃப்ரீன் என்ற பெண் குழந்தையும், 3 வயதில் அசேன் என்ற ஆண் குழந்தையும் இருந்தனர். ஆட்டோ ஓட்டி முடித்து மாலை வீடு திரும்பிய அன்சர், சைதாப்பேட்டை பகுதியில் எண்ணெயில் பொரித்த மீன் துண்டுகளை குழந்தைகளுக்காக வாங்கி வந்துள்ளார்.

அதை சாப்பிட்ட இரண்டு குழந்தைகளும் தொடர்ந்து வாந்தி எடுத்ததால், அருகில் உள்ள மருந்தகத்தில் மருந்து வாங்கி குழந்தைகளுக்கு கொடுத்துள்ளனர். மருந்து குடித்த சிறிது நேரத்திலேயே இரண்டு குழந்தைகளுக்கும் உடல் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் அவர்கள் மயக்க நிலைக்கு சென்றுள்ளனர். இதன் பின்னரே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் அவர்கள்.

குழந்தைகளை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். பொரித்த மீன் சாப்பிட்ட பிறகே குழந்தைகளின் உடல் நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், உணவுப் பொருள் சாப்பிட்ட 6 மணி நேரத்திற்குள் வாந்தியும், அதன்பின் வயிற்றுப்போக்கும் ஏற்பட்டால் அது நிச்சயம் ஃபுட் பாய்சன் என்கிறார்கள் மருத்துவர்கள்.

இதைத்தொடர்ந்து தற்போது இருவரது உடலும் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அம்மருத்துவமனையின் முதல்வர் மருத்துவர் தேரணி ராஜன் கூறுகையில், “உடற்கூராய்வுக்கு பின்னர்தான் குழந்தைகளின் இறப்புக்கான உண்மையான காரணம் தெரியவரும்” என்றார்.

தொடர்ந்து ஃபுட் பாய்சன் குறித்து அவர் பேசுகையில், “அடிக்கடி ஃபுட் பாய்சன் ஏற்பட்டால் அது உயிருக்கே ஆபத்தாக மாறும் அபாயம் அதிகம். இப்படி உணவு ஒத்துக்கொள்ளாமல் போகையில், உடலில் பொட்டாசியம் அளவு குறைவதால் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. ஆகவே ஃபுட் பாய்சன் ஏற்பட்டால், அவர்கள் அலட்சியமின்றி மருத்துவரை சந்திக்கவும். குழந்தைகளின் உடல்நலம் பாதிக்கப்பட்டால் மருத்துவமனையை அணுகவும்” என்றார்.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com