
“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!
IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew
“சென்னையின் செல்ல பிள்ளை தோனி! தமிழகத்தில் உள்ள அனைவரும் போல நானும் ஒரு தோனி ரசிகன்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
தமிழ்நாடு விளையாட்டுத்துறையை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையை நேற்று துவங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தொடர்ந்து முதலமைச்சர் கோப்பை சின்னமான வரையாடு-க்கு வீரன் என பெயர் சூட்டப்பட்டு, முதலமைச்சர் கோப்பைக்கான சின்னம், பாடல், இலட்சின் ஆகியவை முதல்வராலேயே வெளியிடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பேசிய பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “சென்னையின் செல்ல பிள்ளை தோனி. தமிழகத்தில் உள்ள அனைவரும் போல நானும் ஒரு தோனி ரசிகன். தோனி பேட்டிங்கை பார்க்கவே சேப்பாக்கம் மைதானம் சென்றேன். தோனி தொடர்ந்து விளையாட வேண்டும் என நானும் விரும்புகிறேன். தோனி சொந்த உழைப்பால் வளர்ந்தவர். அதனால்தான் இன்று அவர் விளம்பர தூதராக உள்ளார். தமிழகத்தில் பல தோனிகளை நாம் உருவாக்க வேண்டும். கிரிக்கெட்டில் மட்டும் இல்லாமல் அனைத்து விளையாட்டுகளிலும் உருவாக்க வேண்டும்" என்றார்.
மேலும் பேசிய அவர் “உதயநிதி அமைச்சரான பிறகு மாபெரும் எழுச்சியை விளையாட்டுத்துறை பெற்றுள்ளது. நாள்தோறும் ஏதேனும் ஒரு பணி விளையாட்டுத் துறையில் நடைபெற்று வருகிறது. அவருக்கும் அவர் துறையை சார்ந்து இருப்பவர்களுக்கும் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு அரசு 44வது ஒலிம்பியாட் போட்டியை அனைவரும் பாராட்டும் வகையில் மிகச் சிறப்பாக நடத்தி இருக்கிறது. அதனை தொடர்ந்து தமிழ்நாட்டை விளையாட்டில் முன்னோடி மாநிலமாக மாற்ற பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது.
நாட்டிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் வகையில் இருக்கும் விளையாட்டு வீரர்களுக்கும் உயரிய ஊக்கத்தொகையும் விருதுகளும் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டு விளையாட்டுப் போட்டிகள் உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும் என்பதற்காக இந்த ஆண்டு விளையாட்டுத்துறை மானிய கோரிக்கையில் மகத்தான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளைக்கு தனிப்பட்ட முறையில் ரூபாய் 5 லட்சம் நன்கொடையாக வழங்குகிறேன்” என்றார்.