"சசிகலாவை மீண்டும் சேர்ப்பது என்ற கேள்வியே எழவில்லை" - கே.பி.முனுசாமி
சசிகலாவை மீண்டும் சேர்ப்பது என்ற கேள்வியே எழவில்லை என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்திருக்கிறார்.
கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அதிமுக 50 ஆண்டு பொன்விழா நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கேபி முனுசாமி, ஒபிஎஸ் சசிகலா அதிமுகவில் இணைப்பது தொடர்பாக கட்சியின் நிர்வாகிகள் முடிவு செய்வார்கள் என தெரிவித்து இருப்பது தொடர்பான கேள்விக்கு, “ஏற்கனவே தெளிவாக அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் சேர்ந்து கூடி பேசி சசிகலாவை சேர்க்கக்கூடாது என தீர்மானம் போட்டு உள்ளோம். சசிகலாவுக்கு ஆதரவாக பேசிய அதிமுக நிர்வாகிகள் பலரை கட்சியில் இருந்து ஒபிஎஸ், இபிஎஸ் இருவரும் கையொப்பம் போட்டு நீக்கி உள்ளனர். எந்த சூழ்நிலையிலும் சசிகலா சேர்க்க வாய்ப்பு இல்லை என தெரிவித்தார்
அண்ணாவின் மறைவுக்குப் பின்னால், மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் குடும்பத்தின் கையில் இயக்கம் செல்லக்கூடாது என எம்ஜிஆர் அதிமுக என்னும் மாபெரும் இயக்கத்தை தொடங்கி உண்மையான அண்ணாவின் சிந்தனைகள் கொள்கைகளை காப்பாற்றினார். அன்றைக்கு சாதியில்லை, மதமில்லை வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் யாருமில்லை. முழுக்க முழுக்க அண்ணாவின் கொள்கைகள் சிந்தனைகளை எம்ஜிஆர் நிலைநாட்டினார், அப்படிப்பட்ட இந்த இயக்கம் குறிப்பிட்ட சாதிக்கும், சமூகத்திற்கும் செல்கிறது என்று சொன்னால், பெரியார் இறந்தார், அண்ணா இறந்தார், எம்ஜிஆர் இறந்தார், ஜெயலலிதா இறந்த அந்த வரிசையில் கேபி முனுசாமியும் இறந்துவிட்டான்” என்று ஆவேசமாக பதிலளித்தார்.