தவறிவிழுந்த ஹெல்மெட்.. மின்னல்வேகத்தில் வந்த கார்; மாணவர்களை காப்பாற்ற தன் உயிரை பறிகொடுத்த காவலர்!

சாலையில் விழுந்த ஹெல்மெட்டை எடுத்து கொடுக்க சென்ற காவலர் ஸ்ரீதர் அவ்வழியில் திடீரென வந்த கார் மோதி சிகிக்சை பலனின்றி உயிரிழந்தார்.
Sridhar
SridharPuthiyathalaimurai

இன்ஜினியரிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துவரும் அகிலன், திருச்சி மன்னார்புரம் பி.என்.டி.காலனி அருகில், தனது மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே தவறி விழுந்த ஹெல்மெட்டை எடுக்க வண்டியை நிறுத்தியுள்ளார். அப்பொழுது அந்தப் பகுதியில் போக்குவரத்து பணியில் இருந்த திருச்சி நவல்பட்டு அண்ணா நகரை சேர்ந்த போக்குவரத்து தலைமை காவலா் ஸ்ரீதர் (வயது 45) என்பவர் சாலையில் விழுந்த ஹெல்மெட்டை எடுத்து கொடுத்துள்ளார். அப்போது மன்னார்புரத்தில் இருந்து வேகமாக வந்த கார் ஒன்று இவர்கள் மீது மோதவந்தது.

விபத்து நடக்கப்போவதை உணர்ந்த காவலர் ஸ்ரீதர், மாணவர்களை காப்பாற்றும் நோக்கத்துடன் அவர்களை தூரமாக கீழே பிடித்து தள்ளியுள்ளார். கண்இமைக்கும் நேரத்தில் கார் இவர்கள் மீது மோதவே அகிலனின் மோட்டார் சைக்கிள் சேதமடைந்தது. இந்த விபத்தில் காவலா் ஸ்ரீதர் தலையில் பலத்த காயமடைந்ததில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Sridhar
SridharPuthiyathalaimurai

இந்த விபத்தில் சிக்கிய அகிலன் மற்றும் அவரது நண்பர் மதன் பிரசாத் ஆகியோர் தனியார் மருத்துவமைனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். “எங்களை காப்பாற்றும் முயற்சியில் காவலர் ஸ்ரீதர் தனது உயிரை தியாகம் செய்துள்ளார்” என்று சிகிச்சை பெற்று வரும் மாணவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர். இது குறித்து கண்டோன்மென்ட் தெற்கு போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைக்கவசத்தை முறையாக அணியாத மாணவர்களை காப்பாற்றும் முயற்சியில் தலைமை காவலர் ஸ்ரீதர் உயிரிழந்துள்ளார். இன்று அவருடைய மனைவியும், 12 ஆம் வகுப்பு படிக்கும் அவரது மகனும், மூன்றாம் வகுப்பு படிக்கும் அவரது மகளும் கண்ணீர் விட்டு கதறி துடிக்கின்றனர்.

சுனாமி, கஜா புயல் உள்ளிட்ட பேரிடர் காலங்களில் மக்களுக்காக இரவு பகல் பாராமல் உழைத்த மகத்தான மனிதர் ஸ்ரீதர். அவரை இழந்து திருச்சி  காவல்துறை கண்ணீர் வடிக்கிறது.

இருசக்கர வாகன ஓட்டுனர்கள் சிலர் தாங்கள் அணிந்துக்கொள்ள வேண்டிய தலைக்கவசத்தை முறையாக அணிந்து கொள்ளாமல், இருசக்கர வாகனத்திலும், கைகளிலும் மாட்டிக் கொண்டு வாகனங்களை இயக்குகிறார்கள். இதனால் பலசமயங்களில் தலைக்கவசம் சாலையில் உருண்டு விழுகிறது. இது வாகன ஓட்டிகளுக்கும், பின்னால் முன்னால் வரும் வாகன ஓட்டிகளுக்கும் விபத்தில் நேர காரணமாக அமைகிறது.

குறிப்பு: விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டும், உயிர்ப்பலிகளை தடுக்கும் பொருட்டும், அனைவரும் தலைக்கவசத்தை முறையாக அணிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com