பெற்றோர் ஒரு கரையில், மாணாக்கர்கள் மறு கரையில் - பழங்குடி கிராம மக்களின் அவல நிலை
கன்னியாகுமரி மாவட்டத்தில் மழைக்காலத்தில் பெருக்கெடுத்தோடும் தண்ணீரால் தரைமட்ட பாலம் உடைந்து, 12 பழங்குடியின கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.
பெருக்கெடுத்து ஓடும் கோதையாற்று நீரை பார்த்தபடி காத்திருக்கிறார்கள் இந்த மக்கள். வெள்ளத்தால் தரைமட்ட பாலம் உடைந்ததையடுத்து மறுபுறம் உள்ள தங்கள் பழங்குடி கிராமங்களுக்கு செல்லும் வழியறியாது திகைத்திருக்கிறார்கள் இவர்கள். கன்னியாகுமரி மாவட்டம் கோதையார் மற்றும் அதனைச் சுற்றி 12 மலைவாழ் பழங்குடி காணியின மக்களின் கிராமங்களை, மோதிரமலை-குற்றியார் சாலை இணைக்கிறது. இந்த சாலை வழியாக தினசரி ஆறு அரசு பேருந்துகளும், தனியார் வாகனங்கள், பள்ளி, கல்லூரி வாகனங்களும் சென்று வருகின்றன.
ஆனால், கோதையார் மின்உற்பத்தி நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் இந்த தரைமட்டப் பாலத்தின் மீது பாய்ந்தோடி காட்டாற்று வெள்ளம் ஏற்படுவதால் சாலை துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இந்த முறை பாலம் உடைந்து சேதமடைந்துள்ளதால் 12 பழங்குடி காணி இன மக்களின் கவலை அதிகரித்துள்ளது. உடல்நிலை பாதிக்கப்பட்ட ஒருவரை மருத்துவமனைக்கு உரிய நேரத்தில் கொண்டு சேர்க்க முடியாமல் அவர் உயிரிழந்த சோகமும் நேரிட்டுள்ளது
இவர்களின் பாதிப்பறிந்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு புதிய தலைமுறை கொண்டு சென்றபோதெல்லாம் அவர்களை மீட்டு அவரவர் இடங்களுக்கு கொண்டு சேர்க்கும் தற்காலிக நடவடிக்கையே எடுக்கப்படுகிறது. இப்பகுதியில் உயர்மட்ட பாலம் கட்டித்தர வேண்டும் என்று நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் மட்டுமே இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக முடியும்.