மூதாட்டிக்கு 3ஆவது முறையாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக புகார்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் 70 வயது மூதாட்டி ஒருவருக்கு மூன்றாவது முறையாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
விட்டலாபுரத்தைச் சேர்ந்த விவசாயி சிவக்குமாரின் தாயான கண்ணம்மாவிற்கு சில நாள்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவர் பொது இலவச மருத்துவ முகாம் என நினைத்து கொரோனா தடுப்பூசி முகாமிற்கு சென்றுள்ளார். அங்குள்ள பணியாளர்கள் கண்ணம்மாவிடம் எதுவும் விசாரிக்காமல் அவருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர்
கண்ணம்மாவிற்கு அதற்கு சில நாள்கள் முன்புதான் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதுகுறித்து அறிந்த கண்ணம்மாவின் மகன் சிவகுமார், தாயுடன் திண்டிவனம் நகராட்சி வளாகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமிற்கு சென்று அங்கிருந்த மருத்துவர்களிடமும், ஆட்சியரிடமும் முறையிட்டுள்ளார். அவர்களின் அறிவுறுத்தல்படி திண்டிவனம் அரசு மருத்துவமனை மருத்துவர்களை சந்தித்து சிவகுமார் விவரத்தை கூறியுள்ளார். அப்போது கண்ணம்மாவின் உடல்நலம் குறித்த விசாரித்த மருத்துவர்கள், ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் தொடர்பு கொள்ளுமாறு தொலைபேசி எண்ணை வழங்கி அனுப்பி உள்ளனர்.