திருச்சியை கலக்கும் சுதேசி ஆட்டோக்கள் - கட்டணம் குறைவாக இருப்பதால் வரவேற்கும் பயணிகள்
கார்ப்ரேட் வாடகை வாகனங்களால் பெரும் பொருளாதார சிக்கலுக்கு ஆளாகியுள்ள ஆட்டோ ஓட்டுநர்கள், தங்களுக்கான பாதையை தாங்களே உருவாக்கிக்கொள்ளும் வகையில், சுதேசி ஆட்டோ செயலி மூலம் ஒருங்கிணைந்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் 8,000 ஆட்டோக்கள் ஓடுகின்றன. இதில், 600 ஆட்டோ ஓட்டுநர்கள் சுதேசி செயலி மூலம் இணைந்துள்ளனர். பெருவணிக நிறுவனங்களின் ஆட்டோ உள்ளிட்ட வாடகை வாகன சேவையால் நலிந்துவருவதை தடுக்கும் வகையிலும், பெருநிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இல்லாமல் சுதந்திரமாக செயல்படும் வகையிலும், திருச்சியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் சுதேசி செயலியை உருவாக்கியுள்ளனர். அரசு விதிப்படி , 1.8 கிலோமீட்டருக்கு 20 ரூபாயும், அதற்கு மேல் கூடுதலாகும் கிலோமீட்டருக்கு 12 ரூபாயும் என நிர்ணயித்துள்ளனர்.
ஓராண்டுக்கு மேலாக சுதேசி செயலிக்குட்பட்டு செயல்படும் ஆட்டோக்களில் வசூலிக்கப்படும் கட்டணமும், சேவையும் திருச்சி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. தங்கள் சூழ்நிலை கருதி பெருநிறுவனங்களோடு இணைந்து செயல்பட்டுவந்த ஆட்டோ ஓட்டுநர்கள், சுதேசி செயலியில் இணைந்துள்ளனர். இதனை பிற மாவட்டங்களுக்கும் விரிவு செய்ய உள்ளதாகவும் ஆட்டோ ஓட்டுநர்கள் தெரிவிக்கிறார்கள்.