‘படிப்படியாக முன்னேறி தடைக்கற்களை தகர்த்து...’ 2-வது முறையாக கர்நாடக முதல்வராகிறார் சித்தராமையா!

சுமார் 5 ஆண்டுகளுக்கு பிறகு கர்நாடக முதலமைச்சர் பதவியில் அமர உள்ளார் சித்தராமையா. இவரது பின்னணி என்ன... சிறப்புகள் என்ன? விரிவாக பார்க்கலாம் இத்தொகுப்பில்!
சித்தராமையா
சித்தராமையா@siddaramaiah | Twitter

சித்தராமையா...

கர்நாடகாவில் காங்கிரஸ் கடந்த 24 ஆண்டுகளில் இல்லாத அளவு மிகப்பெரிய வெற்றியை காங்கிரஸ் ஈட்டுவதற்கு அடித்தளம் அமைத்தவர். மைசூர் பகுதியை சேர்ந்த இவர், மாநிலத்தில் 6% மட்டுமே உள்ள குருபா என்ற பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர். எனினும் பெரும்பான்மையாக உள்ள லிங்காயத்துகள், ஒக்கலிகா சமூக மக்களிடமும் தன் செல்வாக்கை நிலைநாட்டியவர்.

DK Shivakumar
DK Shivakumar@siddaramaiah | Twitter

40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆழ்ந்த அரசியல் அனுபவம் மிக்கவர். அரசியல் நெளிவுசுழிவுகளை அறிந்தவர். பெரிய அளவில் ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லாதது இவருக்கு பிளஸ் பாயின்ட். மக்கள் பிரச்னைகளுக்காக களத்தில் இறங்கி போராட தயங்காதவரான சித்தராமையா அதனாலேயே கர்நாடக அரசியலில் செல்வாக்கு மிக்க நபரானார்.

எதையும் ஒளித்துமறைத்து பேசாமல் மனதில் பட்டதை பளிச்சென பேசக்கூடியவர் சித்தராமையா. இதுவே அவருக்கு சில நேரங்களில் சிக்கல்களையும் ஏற்படுத்தியுள்ளது. சோஷலிச சித்தாந்தத்தில் நம்பிக்கையுள்ள அரசியல்வாதியான சித்தராமையா ஜனதா, ஜனதா தளம் கட்சிகளில் இருந்தவர். ‘தேவ கவுடா, தனது மகன் குமாரசாமியை கட்சியில் வளர்க்கிறார்’ எனக்கூறி போர்க்கொடி உயர்த்தியதால் ஜனதா தளத்திலிருந்து நீக்கப்பட்டார் சித்தராமையா.

சித்தராமையா
சித்தராமையா@siddaramaiah | Twitter

கர்நாடக அரசியலில் அமைச்சர், துணை முதலமைச்சர், முதலமைச்சர் என படிப்படியாக உயர்ந்த சித்தராமையா 13 முறை மாநில பட்ஜெட்டையும் சமர்ப்பித்த அனுபவம் கொண்டவர். காங்கிரஸ் கட்சி ஏராளமான வாக்குறுதிகளை தேர்தலின் போது அளித்துள்ள நிலையில் அவற்றை நிறைவேற்ற சித்தராமையாவின் அனுபவம் கை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சித்தராமையா முதலமைச்சராக இருந்த போது செயல்படுத்திய அன்னபாக்யா திட்டம், இந்திரா கேன்டீன் திட்டம் போன்றவை அவருக்கு மிகப்பெரும் நற்பெயரை பெற்றுத்தந்தன

மாநில அரசின் ஒப்பந்த பணிகளில் பட்டியலினத்தவருக்கு இட ஒதுக்கீட்டை கட்டாயமாக்கும் இவரது திட்டம் தேசிய அளவில் முன்னுதாரணமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. லிங்காயத், ஒக்கலிகா என இரு பெரும் சமூகத்தினர் அல்லாத மற்ற பிரிவினரை இணைத்து வாக்கு வங்கியை உருவாக்கி புதிய அரசியல் கணக்கை ஏற்படுத்தியது, சித்தராமையாவின் அரசியல் ஆளுமைக்கு மற்றுமொரு உதாரணமாக கூறப்படுகிறது.

Siddaramaiah - DK Shivakumar
Siddaramaiah - DK Shivakumar@siddaramaiah | Twitter

இவரது ஆட்சிக்காலத்தில் தலைநகர் பெங்களூருவிலிருந்து சிறு கிராமங்கள் வரை பாகுபாடு ஏதுமின்றி உரிய முக்கியத்துவம் தந்து வளர்ச்சிக்கு திட்டங்களை வகுத்ததும் சிறப்பான பணிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

எடுத்த முடிவில் உறுதியாக நிற்பவர், கணிக்க இயலாதவராக பார்க்கப்படும் சித்தராமையா பல தடைக்கற்களை கடந்து மீண்டும் முதலமைச்சர் அரியணையில் ஏற உள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com