சென்னையில் சட்டவிரோதமாக மது விற்பவரிடம் லஞ்சம் வாங்கிய காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
எழும்பூர் காவல் நிலைய நுண்ணறிவுப் பிரிவு காவலரான குமுதநாதன் என்பவர், எழும்பூர் ரயில் நிலையம் அருகில் சட்டவிரோதமாக மது விற்பவரிடம் லஞ்சம் வாங்கியுள்ளார். இந்தக் காட்சிகள் வெளியாகிய நிலையில், துறை ரீதியிலான விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, பெட்ரோலுக்கு பணம் வாங்கியதாக குமுதநாதன் கூறியதாகத் தெரிகிறது. ஆனால், லஞ்சம் வாங்கியது உறுதியானதால், குமுதநாதனை பணியிடை நீக்கம் செய்து, காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்த சண்முகம் என்பவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். வேறு யாரெல்லாம் உடந்தையாக உள்ளார்கள் என்பது தொடர்பாக துறைரீதியிலான விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே, மதுபோதையில் பணிக்கு வந்தது, லஞ்சம் வாங்கியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் ஏற்கனவே குமுதநாதன் மீது உள்ளது குறிப்பிடத்தக்கது.