பெரம்பலூர்: வனப்பகுதியில் சந்தன மரங்கள் கடத்தப்படுவதாக புகார் – தனிப்படை அமைப்பு

பெரம்பலூர்: வனப்பகுதியில் சந்தன மரங்கள் கடத்தப்படுவதாக புகார் – தனிப்படை அமைப்பு
பெரம்பலூர்: வனப்பகுதியில் சந்தன மரங்கள் கடத்தப்படுவதாக புகார் – தனிப்படை அமைப்பு
Published on

பெரம்பலூர் அருகே சந்தன மரம் வெட்டி கடத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளதையடுத்து ரேஞ்சர் தலைமையில் 6 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் உள்ள வனப்பகுதிகளில் உள்ள சந்தனமரங்களை கணக்கெடுக்குமாறு வனஅலுவலர் குகனேஸ் உத்தரவிட்டுள்ளார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் கீழக்கணவாய்,மலையாளப்பட்டி, இரட்டைமலைசந்து உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 12 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் மற்றும் மலைப்பகுதிகள் உள்ளது. இந்த நிலையில் பெரம்பலூர் அருகே கீழக்கணவாய் மலையடிவாரத்தில் மர்மநபர்கள் 10 சந்தனமரங்களை வெட்டி கடத்தி விட்டதாக ஓய்வுபெற்ற காவல்துறை உதவி ஆய்வாளர் கண்ணண் என்பவர் பெரம்பலூர் காவல் நிலையம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். வெட்டிக் கடத்தப்பட்ட சந்தனமரங்கள் மதிப்பு சுமார் 15 லட்ச ரூபாய் இருக்குமென்றும், இவை வனப்பகுதிகளிலும், தனியார் நிலங்களிலும் வளர்ந்திருந்த மரங்கள் என்றும் தெரியவந்துள்ளது. மேலும் மூன்று சந்தன மரங்களை அறுத்துப்பார்த்த மர்மநபர்கள் அவை முழுவளர்ச்சி அடையவில்லை என்பதால் அப்படியே விட்டு விட்டு சென்றுள்ளனர்.

கீழக்கணவாய் வனப்பகுதி மற்றும்அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் சந்தனமரங்களை வெட்டிக்கடத்துவது சில மாதங்களாக தொடர்ந்து நடைபெறுவதாக அப்பகுதிவாசிகள் தெரிவித்துள்ளனர்.பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு புகார் சென்றுள்ளது. இதனிடையே சந்தனமரக்கடத்தல் தொடர்பாக விசாரணை நடத்த ரேஞ்சர் தலைமையில் 6 பேர் கொண்ட தனிப்படை அமைத்துள்ளதாக பெரம்பலூர் மாவட்ட வன அலுவலர் குகனேஸ் தெரிவித்துள்ளார். மேலும் வனப்பகுதி மற்றும் தனியார் இடங்களில் வளர்ந்துள்ள சந்தனமரங்களை கணக்கெடுக்க உத்தரவிட்டுள்ளதாகவும் வனஅலுவலர் கூறியுள்ளார்.

தற்போது சுமார் 20 வருடங்களுக்கு மேல் வளர்ச்சியடைந்த மரங்களே கடத்தப்பட்டுள்ளது, மலைப்பகுதிகளில் வனத்துறையினர்  ஆய்வு செய்தால் வெட்டிக்கடத்தப்பட்ட சந்தன மரங்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பது தெரியவரும் என்கின்றனர்.அதே நேரத்தில் கடத்தல்காரர்களை உடனடியாக கைது செய்து உரியநடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com