திருவண்ணாமலை: குடிநீர் தேடி குடும்பம் குடும்பமாக பயணம் செய்யும் பழங்குடியின மக்கள்
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியில், குடிநீர் வசதி செய்துதரப்படாததால் ஆபத்தான முறையில் கிணற்றில் இறங்கி குடிநீர் எடுக்கும் அவலம் நிலவுகிறது.
திருவண்ணாமலை அருகேயுள்ள பாஞ்சரை கிராமத்தில் 25-க்கும் அதிகமான பழங்குடியின குடும்பத்தினர் வசிக்கின்றனர். அங்கு மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் இணைப்புகள் வழங்கப்பட்டும், குடிநீர் வினியோகிக்கப்படாத நிலை உள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டும் பணிகளும் நிறைவடையவில்லை என பாஞ்சரை கிராமத்தினர் கூறுகின்றனர்.
இதனால் தினமும் காலையில் எழுந்ததும், குடும்பம் குடும்பமாக குடிநீர் தேடி புறப்படுவதாகவும், இரண்டு - மூன்று கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று, ஆபத்தான முறையில் கிணற்றில் இறங்கி குடிநீர் எடுத்து வருவதாகவும் வேதனையுடன் கூறுகின்றனர். பாஞ்சரை கிராம பழங்குடியின மக்களின் குற்றச்சாட்டுகள் குறித்து தெள்ளார் ஊராட்சி ஒன்றிய அலுவலரிடம் கேட்டபோது, விரைவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென கூறினார்.