நீலகிரி: கொரோனா தடுப்பூசி போடவரும் மருத்துவர்களை கண்டு ஓடி ஒளியும் பழங்குடியினர்

நீலகிரி: கொரோனா தடுப்பூசி போடவரும் மருத்துவர்களை கண்டு ஓடி ஒளியும் பழங்குடியினர்
நீலகிரி: கொரோனா தடுப்பூசி போடவரும் மருத்துவர்களை கண்டு ஓடி ஒளியும் பழங்குடியினர்

கொரோனாவுக்கு எதிரான பேராயுதமான தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடந்துவரும் அதேவேளையில், தடுப்பூசிக்கு பயந்து வீடுகளுக்குள்ளும், வனப்பகுதியிலும் பதுங்கிக் கொள்கிறார்கள். நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதி பழங்குடியின மக்கள். அவர்களுக்கு தடுப்பூசி போட பெரும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகிறார்கள் மருத்துவத்துறையினர்.

வெளியே பூட்டப்பட்ட வீடுகளை தட்டிக் கொண்டிருக்கிறார்கள் மருத்துவரும், அவருடன் வந்த குழுவினரும். பூட்டிய வீட்டை ஏன் தட்டுகிறார்கள் என்ற கேள்வி எழலாம். வீட்டை வெளியே பூட்டிவிட்டு பின்பக்க வாசல் வழியாக வீட்டுக்குள் பதுங்கிக்கொள்பவர்களை வெளியே கொண்டுவரத்தான் இத்தனை முயற்சி.

இப்படி ஒவ்வொரு வீடாக கதவைத் தட்டி தடுப்பூசி போடும் சம்பவம் நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டாரத்தில் தினந்தோறும் நடந்துவருகிறது. நீலகிரி மாவட்டத்தில் சுமார் 28 ஆயிரம் பழங்குடியின மக்கள் உள்ளனர். இவர்களுக்கு தடுப்பூசி போடுவதில் பெரும் சவாலை சந்தித்து வருகிறார்கள் மருத்துவத்துறையினர்.

தடுப்பூசி போட வருவதாக தெரிந்தால், வனப்பகுதிக்குள் ஒடி ஒளிந்து கொள்வது, வீட்டை வெளியே பூட்டிவிட்டு உள்ளே இருப்பது, அப்படியும் மீறி உள்ளே வந்தால் கட்டிலுக்கு அடியிலும், போர்வை குவியலிலும் பதுங்கிக்கொள்வதுமாக இருக்கிறார்கள் பழங்குடி மக்கள்.

தடுப்பூசி போட வருபவர்களை சிலர் கடுமையாக திட்டவும் செய்கிறார்கள். அவர்களின் மொழியில் பேசி விளக்கி, தடுப்பூசி போடும் பணிகளில் மருத்துவரும், மருத்துவப் பணியாளர்களும் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்கள் பேசுவதை கேட்டு சிலர் முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொள்கிறார்கள்.

மலை கிராமங்களுக்குச் சென்று பழங்குடியினருக்கு தடுப்பூசிகள் போடுவதற்கு பழங்குடி நல அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவத் துறையினருக்கு உதவி செய்து வருகிறார்கள்.

நீலகிரி மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட தடுப்பூசி டோஸ்களில் சுமார் 7500 டோஸ்கள் பழங்குடி மக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை எட்ட முழு முயற்சியுடன் மாவட்ட நிர்வாகமும், மாவட்ட மருத்துவத் துறையினரும் தீவிரம்காட்டி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com