அரசு மருத்துவமனையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் கொலை செய்யப்பட்டது விசாரணையில் அம்பலம்
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சடலம், பணத்திற்காக கொலை செய்யப்பட்டது தெரியவந்திருக்கிறது.
மேற்கு தாம்பரம் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் சுமிதா (41). இவருடைய கணவர் மௌலி. இவர் ஆந்திரா கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியற்றி வருகிறார். இந்நிலையில் சுமிதா கடந்த மாதம் 23ஆம் தேதி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இவர், காணாமல் போயிருந்தார்.
இந்நிலையில் கடந்த 8ஆம் தேதி டவர் மூன்றில் இருக்கும் எட்டாவது தளத்தில் காணாமல் போன சுமிதா அழுகிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதையடுத்து அவரது கணவர் தனது மனைவிதான் என்பதை அடையாளப்படுத்தி இருகிறார். இதைத் தொடர்ந்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டு சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து கடந்த 9ஆம் தேதி அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்த நிலையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை போலீசார் நடத்திய விசாரணையில், மருத்துவமனையில் துப்புறவு ஒப்பந்த பணியாளராக பணிபுரிந்த ரதிதேவி என்பவர் சுமிதாவை கொலை செய்தது தெரியவந்துள்ளது. பணம் மற்றும் செல்போனுக்காக, சுமிதாவை மருத்துவமனையில் உள்ள எட்டாவது தளத்திற்கு வீல்சேரில் கொண்டுசென்று கயிறால் கழுத்தை நெரித்து கொலை செய்தது விசாரணையில் அம்பலமாகி இருக்கிறது.