”3 மாதம் பணி செய்த செவிலியர்கள் கூட பணி நிரந்தரம் கோரி போராடுகிறார்கள்” - மா.சுப்ரமணியன்
''இரண்டு, மூன்று மாதங்கள் மட்டுமே பணி செய்து விட்டு பணி நிரந்தரம் கேட்டு போராடுகிறார்கள். அது சாத்தியமில்லாத ஒன்று'' என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ''இன்று நடந்த நான்காவது மெகா தடுப்பூசி முகாம் 24,882 இடங்களில் நடத்தப்பட்டது. அதில் இன்று 17,19,544 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதுவரை தமிழ்நாட்டில் 62 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரொனா தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை. தற்போது போதுமான அளவு தடுப்பூசி கையிருப்பில் உள்ளது. மழைக்காலம் வந்தாலே டெங்கு பரவும். டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பணியில் உள்ளாட்சி நிர்வாகமும் மக்கள் நல்வாழ்வு துறையும் இணைந்து பணியாற்றி வருகிறது. டெங்கு பரவலை தடுக்க மேலும் துரித நடவடிக்கைகள் எடுக்க மாவட்ட சுகாதார அலுவலர்களிடம் அறிவுறுத்தப்படும்.
இரண்டு, மூன்று மாதங்கள் மட்டுமே பணி செய்து விட்டு தற்கால செவிலியர்கள் பணி நிரந்தரம் கேட்டு போராடுகிறார்கள். அவர்களை பணி நிரந்தரம் செய்வது சாத்தியமில்லை. இருப்பினும் அவர்களை நாளை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளோம். போராடியவர்கள் போராட்டம் நடத்தியதற்கு வருத்தம் தெரிவித்தார்கள். எந்த விழாவாக இருந்தாலும் கொரோனா வழிக்காட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி வருகிறோம்''என்றார்.