2வது அலைக்குப் பின் அதிக எண்ணிக்கையில் செயல்படும் தொழில் நிறுவனங்கள்: அதிகரித்த மின் தேவை!

2வது அலைக்குப் பின் அதிக எண்ணிக்கையில் செயல்படும் தொழில் நிறுவனங்கள்: அதிகரித்த மின் தேவை!
2வது அலைக்குப் பின் அதிக எண்ணிக்கையில் செயல்படும் தொழில் நிறுவனங்கள்: அதிகரித்த மின் தேவை!

கொரோனா இரண்டாவது அலைக்குப் பின்னர் தமிழ்நாட்டில் தொழில் நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் செயல்படத் தொடங்கி உள்ளதால், மின் நுகர்வு அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.

கொரோனா பரவத் தொடங்கிய பின்னர் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட பெருவாரியான தனியார் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை, 'வீட்டிலிருந்தபடியே பணிபுரிதல்' முறைக்கு மாற்றின. அதேபோல் தொழிற்சாலைகளிலும் உற்பத்தி நிறுத்தப்பட்டதால் மின்நுகர்வு பெரிதும் குறைந்தது.

ஆனால், தற்போது கொரோனா அலையின் தாக்கம் குறைந்துள்ளதால் பல தனியார் நிறுவனங்கள் மீண்டும் வழக்கம்போல் செயல்படத் தொடங்கிவிட்டன. இதன் காரணமாக மின் நுகர்வு அதிகரித்துள்ளது. குறிப்பாக மாலை நேரத்தில் சுமார் 14 ஆயிரம் மெகாவாட்டுக்கு மேல் மின்சாரம் தேவைப்படுவதாக கூறப்படுகிறது. இருப்பினும், அண்மைக்காலமாக நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், மின் தேவையை பூர்த்தி செய்வது பெரும் சவாலாக உருவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.

சேலம் அனல் மின் நிலையம், வல்லூர் அனல் மின் நிலையம் ஆகியவற்றில் இரண்டு நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி கையிருப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டிற்கு கப்பல் மற்றும் ரயில்கள் மூலம் நாளொன்றுக்கு சுமார் 90 ஆயிரம் டன் அளவுக்கு நிலக்கரி கொண்டு வரப்படுகிறது.

தமிழ்நாட்டுக்கு பல்வேறு மின் உற்பத்தி திட்டங்கள் மூலமாக 98.122 மில்லியன் யூனிட் மின்சாரம் கிடைக்கிறது. இருப்பினும், மாநிலத்தின் மின் தேவையில், 31 விழுக்காட்டை மட்டுமே இது பூர்த்தி செய்கிறது. இதேபோல் மின் வாரியம் சார்பாக 27.427 மில்லியன் யூனிட் மின்சாரம் தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. அதேவேளையில் காற்றாலை மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால், வரும் ஜனவரி மாதத்திற்குப் பின்னர் மின் தேவையை சமாளிப்பது மின் வாரியத்திற்கு கடும் சவாலாக என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com