'சாப்பாடு இல்ல; மின்சாரம் இல்ல.. ரொம்ப கஷ்டபடுறோம்' - கன்னியாகுமரி மக்கள் வேதனை
தொடர் கனமழையால் கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வீடுகள் இடிந்தன. பலர் உணவு, மின்சாரம் இல்லாமல் அவதியடைந்து வருகின்றனர்.
வடகிழக்கு பருவமழையின் தீவிரத்தால் கன்னியாகுமரி மாவட்டம் தனித்தீவாக மாறியுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அம்மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. நான்கு அணைகளிலிருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு 11ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், கோதையார், தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து சற்று குறைந்துள்ளது. இருப்பினும், அணைகளிலிருந்து திறந்து விடப்பட்ட உபரி நீர் பெருக்கெடுத்து, குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களில் சூழ்ந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மார்த்தாண்டம் அருகே உள்ள வெட்டுவன்னி ஐயப்பன் கோயிலில் இடுப்பளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது. இதே போல, தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் உள்ள கோயில்களையும் தண்ணீர் சூழ்ந்துள்ளது.
குழித்துறை-அருமணை சாலை, மார்த்தாண்டம்-தேங்காய்பட்டினம் சாலை, புதுக்கடை- நித்திரவிளை சாலை, அருமனை-களியல் சாலை, ஞாரான்விளை- திக்குறிச்சி சாலைகளில் தண்ணீர் சூழ்ந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. திக்குறிச்சி, ஞாரான்விளை, குழித்துறை, சென்னித்தோட்டம், மங்காடு, முஞ்சிறை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், அங்குள்ள மக்கள் சிலர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தேரேகால்புதூர் பகுதியில் வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால் உணவு, குடிநீர் கிடைக்காமல் தவிப்பதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர்.