கோவாவில் தொடங்கிய சர்வதேச திரைப்பட திருவிழா: மறைந்த திரையுலக ஜாம்பவான்களுக்கு அஞ்சலி

கோவாவில் தொடங்கிய சர்வதேச திரைப்பட திருவிழா: மறைந்த திரையுலக ஜாம்பவான்களுக்கு அஞ்சலி
கோவாவில் தொடங்கிய சர்வதேச திரைப்பட திருவிழா: மறைந்த திரையுலக ஜாம்பவான்களுக்கு அஞ்சலி

சர்வதேச அளவில் திரைப்படங்களை தயாரிப்பதற்கு உகந்த நாடாக இந்தியா திகழ்வதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேசியுள்ளார்.

இந்தியாவின் சர்வதேச திரைப்பட திருவிழா கோவாவில் தொடங்கியது. விழாவை மத்திய அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், எல்.முருகன் உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். பாலிவுட் இயக்குநர் கரண்ஜோஹர் தொகுத்து வழங்க, மறைந்த சர்வதேச மற்றும் இந்திய திரையுலக ஜாம்பவான்களுக்கு புகழஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த திரைப்பட திருவிழாவில் முதல் முறையாக நெட்பிளக்ஸ், அமேசான் பிரைம், ஜீ5, வூட் மற்றும் சோனி லைவ் ஆகிய ஐந்து ஓடிடி தளங்களும் பங்கேற்றன.

விழாவில் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், படைப்புகளை உருவாக்கும் சிறந்த களமாக இந்தியாவை உருவாக்க, இயக்குநர்கள் பணியாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார். பின்னர் பேசிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன், சர்வதேச அளவில் திரைப்படங்களை தயாரிப்பதற்கு உகந்த நாடாக இந்தியா திகழ்வதாக பேசினார். பல்வேறு கலாசாரங்களையும், சமூக வாழ்க்கை முறைகளையும் அறிந்து கொள்வதற்கான நடைமேடையாகவும் இந்த சர்வதேச திரைப்பட திருவிழா திகழ்வதாக எல்.முருகன் புகழாரம் சூட்டினார்.

கோவாவில் தொடங்கியுள்ள இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ஹாலிவுட் இயக்குநர் மார்டன் ஸ்கார்சீஸூக்கு சத்யஜித் ரே வாழ்நாள் சாதனை விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. விருதை பெற்றதற்காக மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அவர், தனக்கு வழங்கப்பட்ட மரியாதைக்கு இந்திய திரைப்படத் துறைக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். பாலிவுட் நடிகையும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஹேமமாலினி, கவிஞரும், பாடலாசிரியருமான பிரசூன் ஜோஷி ஆகியோருக்கு இந்த ஆண்டுக்கான இந்திய திரைப்பட ஆளுமைக்கான விருது வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com