ஊரக உள்ளாட்சித் தலைவர் தேர்தலில் நடைபெற்ற சுவாரஸ்யங்கள்!

ஊரக உள்ளாட்சித் தலைவர் தேர்தலில் நடைபெற்ற சுவாரஸ்யங்கள்!

ஊரக உள்ளாட்சித் தலைவர் தேர்தலில் நடைபெற்ற சுவாரஸ்யங்கள்!
Published on

மறைமுகமாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தலைவர் தேர்தலில் பல்வேறு சுவாரசியங்கள் அரங்கேறின. நெல்லையில் 22 வயது பொறியியல் பட்டதாரி ஊராட்சி ஒன்றிய தலைவியாக தேர்வு செய்யப்பட்டார். திருப்பத்தூர் மாவட்டத்தில் பவுன்சர்கள் உதவியுடன் உறுப்பினர்களை காப்பாற்றி நட்றாம்பள்ளி ஒன்றிய தலைவராக திமுக வேட்பாளர் வெற்றி பெற்றார்.

திருநெல்வேலி மாவட்டம் மானூர் ஊராட்சி ஒன்றிய தலைவியாக 22 வயது நிரம்பிய பொறியியல் பட்டதாரி ஸ்ரீலேகா தேர்வு செய்யப்பட்டுள்ளார். 19-வது வார்டில் 2,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருந்த அவர், போட்டியின்றி ஒன்றிய தலைவியாக தேர்வு செய்யப்பட்டார். மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதுதான் தனது கடமை என உணர்ச்சி பொங்க தெரிவித்தார்.

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி ஒன்றியத்தில் 15 இடங்களைக் கொண்ட நாட்றாம்பள்ளி ஒன்றியத்தில் 7 இடங்களை திமுகவினர் வென்றிருந்தனர். 15ஆவது வார்டு பகுதியான கே.பந்தாரபள்ளியில் வெற்றி பெற்ற வெண்மதி என்பவர் ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். தனக்கு ஆதரவளித்த 6 திமுக உறுப்பினர்கள் மற்றும் சுயேச்சைகள் இருவரையும் பவுன்சர்கள் பாதுகாப்புடன் அவர் காரில் அழைத்துச் சென்றார். ஒரே மாதிரியான உடை அணிந்த பவுன்சர்கள் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்கள் இருந்த காரை சுற்றிவளைத்தபடி சாலையில் நடந்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த தேர்தலில் வெண்மதி 9 வாக்குகள் பெற்று தலைவர் பதவியை கைப்பற்றினார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியை திமுகவின் மனோகரன் போட்டியின்றி கைப்பற்றினார். மேலும், மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர் ஒன்றியத் தலைவர் பதவியை, மனோகரனின் மனைவி சரஸ்வதி போட்டியின்றி கைப்பற்றி அசத்தினார்.

செங்கல்பட்டில், சிறையில் இருந்தவாரே பிரபல ரவுடியின் மனைவி ஊராட்சி துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். காட்டாங்குளத்தூர் ஒன்றியம், நெடுங்குன்றம் ஊராட்சி மன்ற உறுப்பினராக பிரபல ரவுடி சூர்யாவின் மனைவி விஜயலட்சுமி தேர்வானார். விஜயலட்சுமி பதவியேற்றுவிட்டு திரும்பிய நிலையில், கஞ்சா வழக்கில் காவல் துறையால் கைது செய்யப்பட்டார். எனினும், அவர் சிறையில் இருந்தவாரே நெடுங்குன்றம் ஊராட்சி துணைத் தலைவர் பதவியை கைப்பற்றினார். இதை அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com