“எனது இன்ஷியலை மாற்ற மு.க.ஸ்டாலினுக்கு என்ன அருகதை உள்ளது?” - பொன். ராதாகிருஷ்ணன் ஆவேசம்

“எனது இன்ஷியலை மாற்ற மு.க.ஸ்டாலினுக்கு என்ன அருகதை உள்ளது?” - பொன். ராதாகிருஷ்ணன் ஆவேசம்
“எனது இன்ஷியலை மாற்ற மு.க.ஸ்டாலினுக்கு என்ன அருகதை உள்ளது?” - பொன். ராதாகிருஷ்ணன் ஆவேசம்

பொன்.ராதாகிருஷ்ணன் என்ற பெயரை மாற்றி பொய் ராதாகிருஷ்ணன் என்று பேசுவதா எனது இன்ஷியலை மாற்ற திமுக தலைவர் ஸ்டாலின்க்கு என்ன அருகதை உள்ளது என்று பாஜக வேட்பாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி ஆவேசமாக எழுப்பியுள்ளார்.

கன்னியாகுமரி பாராளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜாண்தங்கம் ஆகியோர் இன்று திறந்தவெளி வாகனத்தில் பரப்புரை மேற்கொண்டனர். பத்மநாபபுரம் முளகுமூடு மூலச்சல் பரைக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நிலையில் பின் செய்தியாளர்களை சந்தித்தார் பொன்.ராதாகிருஷ்ணன்.

அப்போது பேசிய அவர், “திமுக தலைவர் ஸ்டாலின் கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் போது என்னுடைய பெயரை குறிப்பிட்டு சொல்லும் போது அது பொன்.ராதாகிருஷ்ணன் இல்லை பொய் ராதாகிருஷ்ணன் என்று சொல்லி இருக்கின்றார். பொன் ராதாகிருஷ்ணன் என்பது எனது தகப்பனாரின் பெயரின் முதல் இரண்டு எழுத்து. பொன்னையா நாடார் என்பதின் சுருக்கமாக நான் பொன் என்று போட்டு கொண்டேன். மரியாதைக்குரிய ஸ்டாலின் அவர்கள் என்னுடைய இன்ஷியலை மாற்றி எழுத எந்த வகையில் அதிகாரம் படைத்தவர். என்னை அவமான படுத்தி உள்ளார். என்னுடைய தகப்பனாரை அவமான படுத்தி உள்ளார். என்னுடைய தாயாரை அவமான படுத்தி உள்ளார். குடும்பத்தையே அவமான படுத்தி உள்ளார். இது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய விஷயம்.

பொன் ராதாகிருஷ்ணன் ஒரு பொய்யன் என்று சொல்லலாம். அவர் அரசியல் ஆதாயத்திற்கு சொல்லலாம். பொன்.ராதாகிருஷ்ணன் இல்லை பொய் ராதாகிருஷ்ணன் என்று சொன்னால் என்னுடைய தகப்பனார் பெயரை மாற்றுகிறார். இவ்வளவு கேவலமான முறையில் எதிர்காலத்தில் தான் ஒரு முதலமைச்சர் என்று அவர் கட்சி மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் சொல்லி கொண்டிருக்கும் போது எந்த வகையில் ஏற்புடையதாக தமிழக மக்கள் ஏற்று கொள்வார்கள். இதற்கு முன்னால் என்னை விமர்சனம் செய்த போது ஜாதியை சொல்லி கேவலமாக பேசியதோடு மட்டரகமாக ஜாதி ஜாதியுடைய தொழில் இவற்றை குறிப்பிட்டு பேசினார். நான் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. ஏதோ வேகத்தில் பேசி விட்டார்.

 இது வேண்டும் என்றே உள் நோக்கத்தோடு என்னை கொச்சை படுத்த வேண்டுமென்று சொல்லியிருக்கிறார். மரியாதைக்குரிய ஸ்டாலின் மரியாதையோடு தங்களுடைய வார்த்தைகளை திரும்ப பெற வேண்டும். அப்படி இல்லை என்றால் சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும். அரசியலை பிழைப்பாக வைத்து கொண்டு இந்த மாதிரி விஷயங்களை பேசக்கூடாது. என்னுடைய இன்ஷியலை மாற்றுவதற்கு இவர் யார் என்ன அருகதை இருக்கிறது. மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று ஆவேசமாக பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com