வண்ணங்களில் ஹெலிகாப்டர், ரயில் பெட்டிகள்: மாணவர்களை உற்சாகமுடன் வரவேற்கும் அரசுப்பள்ளி
ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு பள்ளிக்கு வரும் மாணவர்களை வியக்க வைக்கும் முயற்சியாக, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளி ஒன்றில் வண்ண வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. கீரனூர் அருகே லெக்கனாப்பட்டியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியின் சுவர்களில் ஹெலிகாப்டர், ரயில் பெட்டிகள் போல ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
வகுப்பறைகளுக்குள் செல்லும் மாணவர்கள், ஹெலிகாப்டரிலும் ரயில் பெட்டிகளிலும் ஏறுவது போல உற்சாகமாக உணரும் விதமாக இவ்வாறு வண்ணங்கள் தீட்டப்பட்டுள்ளன. மேலும் பசுமரங்கள் அடர்ந்த வனம், டைனோசர் என மாணவர்களைக் கவரும் ஓவியங்களும் வகுப்பறை சுவர்களில் இடம்பெற்றுள்ளன. மாணவர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும் என நினைத்து இந்த ஓவியங்களை வரைந்துள்ள ஆசிரியர்களின் செயல், காண்போருக்கு நெகிழ்வை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளை வரவேற்க வாழை மரம் மாவிலை தோரணங்கள் கட்டி அரசு பள்ளிகள் தயாராகியிருந்தன. வேதாரண்யம் அருகே அண்டர்காடு சுந்தரேச விலாச உதவி பெறும் தொடக்கப் பள்ளி, தோப்புத்துறை இந்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கருப்பம்புலம் வடகாடு ஞானம்பிகா உதவி பெறும் தொடக்கப்பள்ளி போன்ற பள்ளிகளில் மாணவ மாணவிகளை வரவேற்க சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இப்பள்ளிகளெல்லாம், பள்ளியின் முகப்பில் வாழை மரங்கள் தோரணங்கள் கட்டி வண்ண விளக்குகளால் பள்ளியை அலங்கரித்திருந்தன.