மதுரை: இந்துக்களும் இஸ்லாமியர்களும் இணைந்து நடத்திய திருவிழா
மதுரை மாவட்டம் மேலூர் அருகே இந்துக்களும் இஸ்லாமியர்களும் இணைந்து நடத்திய திருவிழாவில், வேப்பிலை சேர்த்து சமைத்த கறியை படைத்து வழிபாடு நடத்தப்பட்டது.
சுந்தராஜபுரம், வீரசூடாமணிபட்டி, கச்சிராயன்பட்டி கிராமத்தினர் இணைந்து கண்மாய்க் கரையில் உள்ள அஞ்சுமுழி சாமிக்கு திருவிழா நடத்தினர். நேர்த்திக்கடனாக வந்த நூறு கிடாக்கள், 600 சேவல்களின் கறியை மண்பானைகளில் வைத்து சமைத்தனர். இறைச்சியுடன் வேப்பிலையையும் சேர்த்து சமைத்து, படையலிட்டனர். வேப்பிலை சேர்த்து சமைத்தாலும் அதன் சுவை மாறாமல் இருக்கும்.
இதில் இஸ்லாமியர்களும் கலந்து கொண்டு சிறப்புத் தொழுகை நடத்தி, அனைவருக்கும் சர்க்கரை கொடுத்து ஒற்றுமையுடன் திருவிழாவை கொண்டாடினர். சகோதரத்துவத்துடன் வாழும் இந்துக்களும் இஸ்லாமியர்களும் இணைந்து வழிபடும் இந்தத் திருவிழா காலங்காலமாக நடப்பதாகவும், இதனால் மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்றும் கிராமத்தினர் கூறினர். திருவிழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.