டெல்லியில் ஓராண்டுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுவந்த விவசாயிகள் கூடாரங்களை காலி செய்துவிட்டு சொந்த ஊருக்கு புறப்பட்டு வருகின்றனர்.
3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லியில் விவசாயிகள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வந்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களையும் நீக்கி, நாடாளுமன்றத்தில் அதற்கான சட்டமும் நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவரின் ஒப்புதல் வழங்கப்பட்டதையடுத்து வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டன.
இதனைத்தொடர்ந்து விவசாயிகள் வைத்த கோரிக்கைகளுக்கும் மத்திய அரசு செவி சாய்த்துள்ளது. இந்நிலையில், தங்கள் கோரிக்கைகள் நிறைவேறியதையடுத்து, டெல்லியில் போராடி வந்த விவசாயிகள் தங்கள் கூடாரங்களை காலி செய்துவிட்டு புறப்பட்டு வருகின்றனர். டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் தங்களுடைய பொருட்களை ஏற்றியும், கூடாரங்களை பிரித்தும் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர்.