அகழாய்வு பணி: மணலூரில் கண்டறியப்பட்ட மனித எலும்புக்கூடு
சிவகங்கை மாவட்டம் கீழடியில் 7ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெறும் நிலையில், மணலூரில் 75 சென்டி மீட்டர் ஆழத்தில் மனித எலும்புக் கூடு கண்டறியப்பட்டுள்ளது.
கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் விரிவான முறையில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், 7ஆம் கட்ட அகழாய்வில் இதுவரை முதுமக்கள் தாழியுடன் மனித எலும்பு கூடுகள், மண் பானை, வட்டில் மூடிகள், சங்கு வளையல்கள், பவள மணிகள் உள்ளிட்ட 700-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்நிலையில், தொன்மையான மனிதர்களின் வாழ்வியல் முறையை அறியும் வகையில் மணலூரில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில் மனித எலும்புக்கூடு கண்டறியப்பட்டுள்ளது. 75 சென்டி மீட்டர் ஆழத்தில் இந்த எலும்புக் கூடு கண்டறியப்பட்டுள்ளதால், அது 50 ஆண்டுகளுக்குட்பட்ட அண்மைக் காலத்தை சார்ந்ததாக இருக்கலாம் என தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவானந்தம் தகவல் தெரிவித்துள்ளார்.