விருதுநகர்: சில்லரை பெறுவதுபோல திசை திருப்பி ஏமாற்றி திருட்டு
கண்கட்டு வித்தைபோல ரூபாய் நோட்டை மாற்றிக் கொடுத்து துணிக்கடைக்காரரை ஒரு கும்பல் ஏமாற்றிய சம்பவம் அருப்புக்கோட்டையில் நடந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை துணிக் கடையில் ஒரு கும்பல் நூதன முறையில் 500 ரூபாயை களவாடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. துணிக் கடைக்குள் நுழைந்த ஒரு கும்பல் தனித்தனியாக கடைக்கு வந்தவர்களைபோல் தனித்தனியாக உள்ளாடைகளை வாங்கியுள்ளனர். அதில் ஒருவர் முதலில் 500 ரூபாயை கொடுத்து சில்லரை வாங்கிக் கொண்டிருந்தபோது, மற்றொரு நபர் 500 ரூபாயை நீட்டியுள்ளார்.
அதை கடைக்காரர் வாங்குவதற்குள் சில்லரை பெற்ற நபர், வேறு ரூபாய் நோட்டை மாற்றி கொடுக்குமாறு கவனத்தை திசை திருப்பியுள்ளார். அந்த இடைப்பட்ட நேரத்தில் 500 ரூபாயை நீட்டியவர் தமக்கு பின்னால் இருந்த பெண்ணிடம் அந்த ரூபாய் நோட்டை கொடுத்துவிட்டு, கடைக்கார பெண்ணிடம் வெறும் கையை நீட்டி, 500 ரூபாய் கொடுத்தாகக் கூறி சில்லரை பெற்று சென்றார். இந்த கும்பலின் நூதன திருட்டுக் காட்சிகள் அப்பகுதியில் அதிக அளவில் பரவி வருகிறது.

