அன்பில் கசிந்துருகி பிரவாகமெடுத்த காதல் - 11 ஆண்டுகளுக்கு பின் சேர்ந்த தம்பதி

அன்பில் கசிந்துருகி பிரவாகமெடுத்த காதல் - 11 ஆண்டுகளுக்கு பின் சேர்ந்த தம்பதி
அன்பில் கசிந்துருகி பிரவாகமெடுத்த காதல் - 11 ஆண்டுகளுக்கு பின் சேர்ந்த தம்பதி

தெலங்கானாவில் காணாமல்போன பெண்ணை 11 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர் தமிழக காவல்துறையினர். மனநிலை பாதிக்கப்பட்டு தன் நிலை மறந்து இருந்த அந்த பெண், குடும்பத்தினரை சந்தித்த மகிழ்ச்சியில் ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.

'செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே' என்பதைபோல பெரம்பலூரில் நிகழ்ந்துள்ளது ஒரு நெகிழ்ச்சி சம்பவம். தெலங்கானாவில் 11-ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன மனைவி தமிழகத்தின் பெரம்பலூரில் கிடைத்ததால் மகிழ்ந்து நெகிழ்கிறார் நரசய்யா. தற்போதைய தெலங்கானா மாநிலம் ஜெகத்தியாலாவைச் சேர்ந்தவர். அவருடைய மனைவி சுனிதா 2010-ஆம் ஆண்டு காணாமல் போனார்.

3 பெண் குழந்தைகளுடன் மனைவியை தேடி அலைந்த நிலையில், காவல்துறையினர் காட்டிய அடையாளாம் தெரியாத பெண்ணின் உடலை சுனிதா என நினைத்து இறுதிச்சடங்கும் செய்துள்ளார். மகள்களுக்காக வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று, வேதனையில் உழன்ற நரசய்யாவுக்கு தேனாய் வந்து பாய்ந்தது அந்த செய்தி. ஆம் இறந்துவிட்டார் என நினைத்த சுனிதா உயிரோடு இருக்கிறார் என்பதுதான் அது.

2015-ஆம் ஆண்டு மனநிலை பாதிக்கப்பட்டு பெரம்பலூர் வந்த அவரை, வேலா கருணை இல்லத்தினர் பராமரித்து வந்துள்ளனர். அவரது குடும்பத்தினரை தேடிய போதுதான் நரசய்யாவின் விவரம் தெரியவந்துள்ளது. காவல்துறையினர் உதவியுடன் நரசய்யாவிடம் ஒப்படைக்கப்பட்டார் சுனிதா. 11 ஆண்டுகளுக்கு பின் மனைவியை சந்தித்த மகிழ்ச்சியில் வாஞ்சையோடு நாசய்யா அன்பை முத்தத்தால் பரிமாற அங்கு மீண்டுமொரு மாயநதி பிரவாகமாகியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com