நாமக்கல்: அறுவை சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்த சிறுவனிடம் போனில் நலம் விசாரித்த முதல்வர்
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 13ஆம் தேதி விபத்தில் சிக்கி, அறுவை சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்த சிறுவனிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் நலம் விசாரித்தார்.
நாமக்கல் மாவட்டம் குப்பம்பாளையத்தைச் சேர்ந்த சுப்பிரமணி-வசந்தா தம்பதியினரின் 13வயது மகன் வர்ஷாந்த், கடந்த 13ஆம் தேதி, இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதியதில், வர்ஷாந்த் பலத்த காயமடைந்தார். பின்னர் தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக அழைத்துச் செல்லப்பட்டு, சேலம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் வர்ஷாந்த் அனுமதிக்கப்பட்டார். மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்ட நிலையில், மண்டை ஓட்டை திறந்து சிக்கலான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
முதலமைச்சரின் இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48 திட்டத்தின் கீழ், இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு சிறுவனின் உயிர் காக்கப்பட்டது. இந்த சிகிச்சைக்காக இரண்டு லட்ச ரூபாய் செலவாகும் நிலையில், இன்னுயிர் காக்கும் திட்டத்தின் மூலம் வர்ஷாந்திற்கு இலவசமாக செய்யப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சிக்கலான அதிநவீன சிகிச்சைகளை, ஏழை, எளிய மக்களும் உரிய நேரத்தில் கிடைக்கும் வகையில் காப்பீடு திட்டத்தில் இணைத்துள்ள முதலமைச்சருக்கு மருத்துவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். இதனிடையே, சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய சிறுவன் மற்றும் அவரது குடும்பத்தாரிடம் முதலமைச்சர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி, நலம் விசாரித்ததோடு, தொடர்ந்து மருத்துவ செலவிற்கு உதவி செய்வதாகவும் உறுதி அளித்தார்.