பள்ளிக்கரணையில் சூழல் பூங்காவை காணொலி மூலம் திறந்து வைத்த முதல்வர்
சென்னை வேளச்சேரி அருகே பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் 20 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட சூழல் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில், 700 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதி 176 வகையான பறவை இனங்கள், 10 வகையான பாலூட்டிகள், 21 வகையான ஊர்வனங்கள், 50 வகையான மீன் இனங்கள், 14 வகையான வண்ணத்து பூச்சிகளின் வாழ்விடமாகவும், 459 வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் பரவலுக்கும் உதவிகரமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019 - 2020 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி ஏறத்தாழ 2,65,313 பறவைகள் இந்த சதுப்பு நிலப்பகுதியில் கண்டறியப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. பல்லுயிர் பரவலை பாதுகாக்கும் வகையில், சதுப்பு நிலத்தின் வடமேற்கு பகுதியில், சூழலியல் பூங்காக அமைக்க 20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, சதுப்பு நிலப்பகுதியை சுற்றி, 1,700 மீட்டர் நீளத்திற்கு தடுப்பு சுவர் கட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், 2 புள்ளி 5 ஹெக்டேர் நிலப்பரப்பிலான இந்த சூழலியல் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி மூலம் திறந்து வைத்தார். பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பயன்பெறும் வகையில், பார்வையாளர்கள் நடைபயிற்சி மேற்கொள்ள சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைப்பாதை, பல்லுயிர் பரவல், வளம் குறித்த விவரங்களை விளக்கும் வகையிலான கருத்தியல் அடையாளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பசுமைக்காக நடைப்பாதையின் இருபுறங்களிலும் மண் சார்ந்த 5,000 மரக்கன்றுகளும் நடப்பட்டுள்ளன.
ஆண்டுதோறும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு வருகை தரும் வெளிநாடு மற்றும் உள்ளூர் வலசை பறவையினங்களின் பாதுகாப்பு மற்றும் மேலாண்மையினை கருத்தில்கொண்டு பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தினை பறவைகள் சரணாலயமாக அறிவிப்பதற்காக முயற்சிகளையும் தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.