சென்னை: தமுமுக பெயரை பயன்படுத்தும் விவகாரத்தில் இருதரப்பினரிடையே மோதல்

சென்னை: தமுமுக பெயரை பயன்படுத்தும் விவகாரத்தில் இருதரப்பினரிடையே மோதல்
சென்னை: தமுமுக பெயரை பயன்படுத்தும் விவகாரத்தில் இருதரப்பினரிடையே மோதல்

சென்னையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பெயரை பயன்படுத்துவது தொடர்பாக இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா, மனிதநேய மக்கள் கட்சி என்ற பெயரில் அரசியல் கட்சியையும் நடத்தி வருகிறார். இந்த நிலையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக இருந்த ஹைதர் அலியை அமைப்பில் இருந்து நீக்கி, பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தெரிகிறது. இதுதொடர்பான வழக்கில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை ஹைதர் அலி தரப்பு பயன்படுத்த உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

இதற்கிடையே தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சுருக்கமான த.மு.மு.க. என்னும் பெயரை வர்த்தகக்குறி சட்டத்தின்கீழ், ஜவாஹிருல்லாவுக்கு எதிர் தரப்பினர் பதிவு செய்துள்ளனர். இத்தகைய சூழலில் சென்னை மண்ணடியில் உள்ள தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைமையகத்துக்கு அருகிலேயே த.மு.மு.க. என்ற பெயரில் ஹைதர் அலி தரப்பு புதிய அலுவலகத்தை திறந்துள்ளனர். அங்கு த.மு.மு.க. தலைமை அலுவலகம் என பேனர் வைத்துள்ளனர். இது குறித்து ஜவாஹிருல்லா தரப்பினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

ஆனால் பெயரை பதிவு செய்திருப்பதால் பேனரை அகற்ற முடியாது என காவல்துறையினர் கூறிவிட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்றிரவு மனித நேய மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஹைதர் அலி தரப்பு அலுவலகத்துக்கு சென்றபோது, இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியது. ஒருவரையொருவர் கல்வீசித் தாக்கிக் கொண்ட நிலையில், அங்கிருந்த பேனர் கிழிக்கப்பட்டு, ஹைதர் அலி தரப்பு அலுவலகம் சூறையாடப்பட்டது. தகவலறிந்து நிகழ்விடத்துச் சென்ற காவல்துறையினர் லேசான தடியடி நடத்தி இருதரப்பினரையும் விரட்டி அடித்தனர். இந்நிகழ்வில் ஒரு காவலர் உட்பட 3 பேர் காயமடைந்தனர்.

இதைத்தொடர்ந்து, "மோதல் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்" என  மமக பொதுச்செயலாளர் ஹாஜா கனி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com