எளிமையால் அதிரவைக்கும் வேட்பாளர்... கூரை வீட்டிலிருந்து புறப்பட்ட சமூக போராளி!

எளிமையால் அதிரவைக்கும் வேட்பாளர்... கூரை வீட்டிலிருந்து புறப்பட்ட சமூக போராளி!
எளிமையால் அதிரவைக்கும் வேட்பாளர்... கூரை வீட்டிலிருந்து புறப்பட்ட சமூக போராளி!

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் பெரும்பான்மையானவர்கள் கோடீஸ்வரர்கள். நடமாடும் நகைக்கடையாக நடமாடிக் கொண்டிருப்பவர்கள். அவர்களுக்கு மத்தியில் இப்படியும் அரசியல்வாதிகள் இருக்கிறார்களா என்று வியக்க வைப்பவர்கள் ஒரு சிலரே. அப்படி ஒருவர்தான் திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக போட்டியிடும் க.மாரிமுத்து.

திருத்துறைப்பூண்டியில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காடுவாகுடி கிராமத்தில் உள்ளது இந்த வீடு. சிமெண்ட் பூச்சு காணாத எளிமையான வீடு. கூரை வேய்ந்து பல ஆண்டுகள் ஆனதுபோல காட்சியளிக்கும் பழமை. இது, நடப்பு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் இல்லம் என்பது காண்போரை ஒரு நிமிடம் அதிர்ச்சியடைய வைக்கும்.

திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக போட்டியிடும் க.மாரிமுத்துவின் வீடுதான் இது. பெரிய வசதிகளற்ற கூரை வீடு என்பது குறித்த எந்த தயக்கமும் இல்லாதவரான மாரிமுத்துவின் மனைவி ஜெயசுதா, தனது கணவர் மக்களுக்காக போராடும் நிலையில், தானும், மாமியாருமாக கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்துவதாக கூறுகிறார்.

49 வயதாகும் மாரிமுத்து, 25 ஆண்டுகளாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இயங்கி வருபவர். சாதாரண, அடித்தட்டு மக்களுக்கான போராட்டங்களை முன்னெடுத்து வந்ததே இவரை வேட்பாளராகவும் அறிவிக்க வைத்திருக்கிறது

மாரிமுத்து தனது வேட்பு மனுவில், 3 ஆயிரம் ரூபாய் பணம் கையிருப்பு, வங்கிக்கணக்கில் 58 ஆயிரம் ரூபாய் பணம், மனைவியின் கையில் ஆயிரம் ரூபாய் பணம், மனைவியின் 3 பவுன் நகைகளை சொத்து மதிப்பாக குறிப்பிட்டுள்ளார். பூர்வீக வீடும் மனைவி பெயரிலான சொத்தாக குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சுரேஷ்குமார் தனது சொத்து மதிப்பு 20 கோடிக்கு மேல் என்று பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அமமுக சார்பில் சென்னையைச் சேர்ந்த ரஜினிகாந்த் என்பவரும், நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்த்தி என்பவரும் போட்டியிடுகிறார்கள். இவர்களுடன் போட்டியிடும் மாரிமுத்து, மக்களின் குரலாக ஒலிப்பதற்காகவும், மக்களுக்கான திட்டங்களை பெற்றுத்தரவும் சட்டமன்றம் செல்ல களத்தில் நிற்பதாக கூறுகிறார். போராட்டங்களே வாழ்க்கையானபின், தேர்தலும் ஒரு போராட்ட களம்தான் என்கிறார் மாரிமுத்து.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com