மண்வளத்தை காக்க பறவைக் கரைசல்: புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ள பட்டதாரி இளைஞர்!

மண்வளத்தை காக்க பறவைக் கரைசல்: புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ள பட்டதாரி இளைஞர்!
மண்வளத்தை காக்க பறவைக் கரைசல்: புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ள பட்டதாரி இளைஞர்!

தருமபுரி அருகே சுற்றுச்சூழல் மற்றும் மண்வளத்தை பாதுகாக்க பறவைக்கரைசல் தயாரித்து பயிர்களில் தெளிக்கும் முறையை பின்பற்றி வருகிறார் பட்டதாரி இளைஞர் ஒருவர். இந்த முயற்சி குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்.

பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பாப்பம்பாடி கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி என்பவர் முட்டைக்காக கோழிகளை வளர்க்கும் கோழிப் பண்ணையை 30 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். கோழிப்பண்ணையில் அவ்வப்போது உயிரிழக்கும் கோழிகளால் சுற்றுச்சூழல் பாதிப்படையாத வகையில் அவற்றை குழிதோண்டி புதைத்து அல்லது பிரத்தியேக இயந்திரம் மூலம் எரித்துத்தான் அழிக்க வேண்டும் என்பது அரசின் விதி. மூர்த்தி தனது பண்ணையிலும் இந்த நடைமுறைகளைத் தான் பின்பற்றி வந்துள்ளார்.

ஆனால், சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிராம மக்கள், சுற்றுசூழல் மாசடைவதாகவும், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதாகவும் கூறி, கோழிப்பண்ணைக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் பட்டதாரியான மூர்த்தியின் மகன் ஹேமந்த் குமார் (24). கல்லூரி முடித்து வெளியில் வேலைக்கு செல்ல விருப்பமில்லாமல், சொந்த ஊரில் விவசாயம் செய்தும், அதில் புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி, இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில், பண்ணை தொடர்பாக தருமபுரி மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு அலுவலர் சாமுவேல் ராஜ்குமாரை ஒருமுறை சந்தித்துள்ளார். அப்போது அவர் வழங்கிய ஆலோசனைகளின்படி புதிய தொழில்நுட்பம் ஒன்றை முயற்சி செய்ய முன் வந்துள்ளார். அதாவது, மீன் விற்பனை கடைகளில் மிஞ்சும் மீன் இறைச்சி கழிவுகளைக் கொண்டு மீன் கரைசல் தயார் செய்து பயிர்களுக்கு பயன்படுத்தும் இயற்கை வேளாண்மை நடைமுறை ஒன்று உள்ளது.

அதேபோல, பண்ணையில் உயிரிழக்கும் கோழிகளைக் கொண்டு, 'பறவைக் கரைசல்' தயாரித்து பயிர்களுக்கு பயன்படுத்துவதே அந்த புதிய செயல்முறை, அதை முயற்சித்துள்ளார். இதில் தொழில்நுட்பம் மூலம், பண்ணையில் தினமும் உயிரிழக்கும் கோழிகளை கரைசலாக மாற்ற, பிரத்தியேக இயந்திரம் மூலம் கோழிகளை துண்டுகளாக்கி, நீரில் ஊற வைத்த மண் பானையில் இட்டு அதனுடன் சாணக் கரைசல், பனை வெல்லம் அல்லது வெல்லக் கரைசல் அல்லது கரும்புச் சாறு ஆகியவற்றை குறிப்பிட்ட அளவில் சேர்த்த பின்னர் முக்கால் பானை அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கி விட வேண்டும்.

பின்னர் மண்பாண்ட தட்டால் பானையை மூடி சாக்குத் துண்டு மூலம் இறுகக் கட்ட வேண்டும். அதன்பின்னர், ஏற்கெனவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ள படுக்கை மீது பானைகளை வரிசையாக அடுக்க வேண்டும். மிதமான ஈரப்பதமுள்ள கோழி எருவைக் கொண்டு பானையை மூடும் அளவு மூடாக்கு உருவாக்க வேண்டும். இந்த மூடாக்கில் ஈரப்பதம் குறையாத வகையில் தினமும் தண்ணீர் தெளிக்க வேண்டும். இவ்வாறு வைக்கப்பட்ட பானையை 90 நாட்களுக்கு பின்னர் எடுத்தால் இறகு, எலும்பு உட்பட கோழிகளின் 90 சதவீத பாகங்கள் கரைசலாக மாறியிருக்கும். இந்த வடித்து எடுத்து 1 லிட்டர் கரைசலை 20 லிட்டர் தண்ணீரில் கலக்க வேண்டும்.

இந்த பறவைக் கரைசலை நெல்லி, சப்போட்டா, கொய்யா உள்ளிட்ட பழவகை மரங்களின் வேர்ப்பகுதியைச் சுற்றி மரத்துக்கு 2 லிட்டர் வீதம் ஊற்றி விடலாம். ஒருமுறை ஊற்றிய மரத்துக்கு மீண்டும் 6 மாதத்துக்கு பின்னர் ஊற்றலாம். இவ்வாறு பரவைக் கரைசல் மூலம் ஊக்கமளிக்கப்பட்ட மரங்கள், வழக்கத்தை விட 20 சதவீத கூடுதல் விளைச்சல் தரத் தொடங்கியுள்ளது.

இதர பயிர்களுக்கும் இந்த கரைசலால் ஊக்கம் அளிப்பது தொடர்பான சோதனைகளை முயற்சித்து வருகிறோம். அதேபோல, செடிகளின் மீது ஸ்பிரே முறையில் இந்த கரைசலை தெளித்தால் கிடைக்கும் பயன் குறித்தும் சோதித்து வருகிறோம். இந்த கரைசல் நேரடியாக விற்பனை செய்தால், ரூ.100-க்கும், தண்ணீர் கலந்து விற்பனை செய்தால், ஒரு லிட்டர் ரூ.5 விற்றால் நல்ல வருவாய் கிடைக்கும்.

இவ்வாறாக உயிரிழந்த கோழிகளால் ஏற்படும் சூழல் பாதிப்பையும் தடுத்து, அதே கோழிகளைக் கொண்டு தயாரிக்கும் பறவைக் கரைசல் மூலம் பயிர்களின் விளைச்சலையும் அதிகரிக்க முடிந்துள்ளது. இந்த முறையை நாமக்கல் போன்ற அதிக பண்ணைகள் உள்ள இடங்களில் பின்பற்றினால், கூடுதலாக தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கும், பண்ணை உரிமையாளர்களுக்கு வருவாய் கிடைக்கும். சுற்றுச் சூழல் பாதுக்காக்க முடியும், இயற்கை விவசாயத்தை மீட்க முடியும் என்பது நிதர்சனம்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com